பிரபல டி.வி. நடிகர் தற்கொலை: ஓடும் பஸ்சில் விஷம் குடித்தார்


பிரபல டி.வி. நடிகர் தற்கொலை: ஓடும் பஸ்சில் விஷம் குடித்தார்
x

‘மர்மதேசம்’ தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரபல டி.வி. நடிகர் ேலாகேஷ், ஓடும் பஸ்சில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி,

'மர்மதேசம்', 'ஜீ பூம்பா' ஆகிய பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் லோகேஷ் ராஜேந்திரன். விஜயகாந்த் நடித்த 'கண்ணுபடப்போகுதய்யா' உள்பட சில திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார். பல்வேறு விருதுகளையும் பெற்று உள்ளார்.

தற்போது 31 வயதாகும் லோகேஷ், நடிப்பை தாண்டி திரைப்படம் இயக்குவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இதற்காக உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். பல்வேறு குறும்படங்களை இயக்கி உள்ளார். திரைப்படம் ஒன்றை இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். இதற்காக தனது நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலரிடம் பணம் திரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

விஷம் குடித்து தற்கொலை

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லோகேஷ், சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதித்ததில் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது.

ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்ைச அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு ேலாேகஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த கோயம்பேடு போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்தனர்.

குடும்ப பிரச்சினையா?

விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட லோகேசுக்கு திருமணமாகி விட்டது. கருத்துவேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து, தனது தாயுடன் காஞ்சீபுரத்தில் வசித்து வந்தார்.

பல்வேறு குடும்ப பிரச்சினையால் லோகேஷ் கடந்த சில மாதங்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர், காஞ்சீபுரத்தில் இருந்து சென்னைக்கு பஸ்சில் வரும்போது ஓடும் பஸ்சில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். கோயம்பேடு பஸ் நிலையம் வந்ததும் மயங்கி விழுந்த அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

எனவே லோகேஷின் தற்கொலைக்கு குடும்ப பிரச்சினை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து கோயம்பேடு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தை பேட்டி

இந்தநிலையில் தற்கொலை செய்துகொண்ட நடிகர் லோகேஷின் தந்தை ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது மகன் லோகேஷ், 2011-ம் ஆண்டு அனிஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டு, மனைவியுடன் மாடம்பாக்கத்தில் வசித்து வந்தார். நான் வில்லிவாக்கத்தில் வசித்து வரும் நிலையில், திருமணத்துக்கு பிறகு லோகேஷ் என்னுடனான தொடர்பை துண்டித்துக்கொண்டார். இதுவரை இருமுறை மட்டுமே என்னை சந்தித்துள்ளார்.

இறுதியாக கடந்த சனிக்கிழமை என்னை சந்திக்க வந்த லோகேஷ், என்னிடம் பணம் வேண்டும் என கேட்டுப்பெற்று சென்றார். அதன்பிறகு எங்கு சென்றார்? என்பது பற்றி எனக்கு தெரியாது.

விவாகரத்து நோட்டீஸ்

மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் குடும்ப பிரச்சனை குறித்து எனக்கு தெரியாது. விவாகரத்து குறித்து நோட்டீஸ் வந்த பிறகே கடந்த 6 மாதமாக இருவரும் பிரிந்து வாழ்வது பற்றி எனக்கு தெரிந்தது.

கடந்த திங்கட்கிழமை போலீசார் தகவல் தெரிவித்த பிறகே லோகேஷ் தற்கொலை முயற்சி மேற்கொண்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் குறித்து எனக்கு தெரியவந்தது.

லோகேஷ் சிறந்த நடிகர், மர்ம தேசம் மூலம் இந்திய அளவில் பிரபலமாகி தெலுங்கில் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை பெற்றவர். முன்னணி நடிகர்களுடன் 150-க்கும் மேற்பட்ட தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

எம்.ஆர்.ராதா உறவினர்

நடிகர் எம்.ஆர்.ராதாவின் தம்பி மகன் நான். ஆனால் மிகப்பெரும் நடிகரின் பரம்பரையைச் சேர்ந்தவன் என்றில்லாமல் சொந்த முயற்சியில் எனது மகனை நடிப்பில் முன்னேற வைத்தேன்.

குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடால், அவரது மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் மன உளைச்சலில் இருந்த லோகேஷ் தற்கொலை செய்துகொண்டதாக எனக்கு தெரியவந்துள்ளது.

அவரது மனைவி அனிஷா, பார்வையாளர் போல் வந்து பார்த்துவிட்டு லோகேஷ் உடல் தங்களுக்கு வேண்டாம் என தடையில்லா சான்று எழுதிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். பிரேத பரிசோதனை முடிந்து எனது மகன் உடலை வில்லிவாக்கத்தில் உள்ள எனது வீட்டுக்கு எடுத்துச்செல்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story