கோயம்பேடு திரையரங்கில் 'லியோ' படம் பார்க்க குவிந்த ரசிகர்கள்
கோயம்பேடு திரையரங்கில் ‘லியோ' படம் பார்க்க குவிந்த ரசிகர்கள்: போக்குவரத்து நெரிசலால் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுப்பு.
கோயம்பேடு,
நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கும், பரபரப்புக்கும் மத்தியில் நேற்று காலை முதல் தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. இந்த நிலையில், லியோ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை கோயம்பேடு திரையரங்கில் திரையிடப்பட மாட்டாது என அறிவிப்பு பலகை வைத்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது.
இதையடுத்து, டிக்கெட்டுகள் வாங்குவதற்கு திரையரங்கில் ரசிகர்கள் முண்டியடித்ததால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை கலைத்து விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை முதல் கோயம்பேடு திரையரங்கில் லியோ திரைப்படம் பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் திரையரங்கிற்குள் படையெடுக்க தொடங்கினார்கள்.
திரையரங்க வளாகம் முழுவதும் அதிக அளவில் ரசிகர்கள் திரண்டு இருந்தனர். இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு பகுதியில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் நத்தை போல ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவசர தேவைக்கு மருத்துவமனைக்கு செல்பவர்களும் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். கடைசி நேரத்தில் டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டு உரிய முன்னேற்பாடுகள் இல்லாமல் காட்சிகள் வெளியிடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், இனிவரும் நாட்களில் விடுமுறை நாட்கள் என்பதால் மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.