கலெக்டரை முற்றுகையிட்ட விவசாயிகளால் பரபரப்பு


கலெக்டரை முற்றுகையிட்ட விவசாயிகளால் பரபரப்பு
x

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் பயிர்க்கடன் தள்ளுபடி ரசீது வழங்காததை கண்டித்து கலெக்டரை முற்றுகையிட்ட விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் பயிர்க்கடன் தள்ளுபடி ரசீது வழங்காததை கண்டித்து கலெக்டரை முற்றுகையிட்ட விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை வட்டார விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் ஏராளமான விவசாயிகள் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் வந்தனர். ஏராளமான விவசாயிகள் திரளாக வந்தபோது குறைதீர்க்கும் கூட்டம் பகுதியில் பாதுகாப்பிற்காக நின்ற போலீசார் சிலரை மட்டும் உள்ளே மனு அளிக்க அனுப்ப முடியும் என்று தெரிவித்தனர்.

ஆனால், விவசாயிகள் எங்களின் கோரிக்கையை நேரில் அனைவரும் சென்றுதான் தெரிவிக்க முடியும் என்று கூறி போலீசாரை மீறி கூட்ட அரங்கிற்குள் சென்றனர். அவர்களை மறிக்க முயன்ற போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியில் விவசாயிகள் அனைவரும் கூட்ட அரங்கிற்குள் சென்றனர்.

அப்போது அவர்கள் கலெக்டரிடம் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், சிறுகம்பையூர், அஞ்சுகோட்டை, திருத்தேர்வளை, எட்டுகுடி ஆகிய 4 கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யவில்லை. கடன் தள்ளுபடிக்கான ரசீது இல்லாததால் கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக்கு உரம் கொடுக்கவில்லை. இதுகுறித்து உங்களின் கவனத்திற்கு கொண்டு வந்தபோது தள்ளுபடி செய்யப்படாத விவசாயிகளுக்கு உரம் ரசீது இன்றி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

பயிர்க்கடன்

ஒரு சில விவசாயிகளுக்கு மட்டும் பெயரளவில் வழங்கிவிட்டு மற்றவர்களுக்கு வழங்க மறுக்கின்றனர். பயிர்க்கடன் தள்ளுபடி செய்து வழங்காவிட்டால் உரம் வாங்க முடியாது. அடுத்த பயிர்க்கடன் வாங்க முடியாது. தற்போது மழை பெய்து வருகிறது. தற்போது உரம்போட்டு மருந்து தெளித்தால்தான் பயிர்களை காப்பாற்ற முடியும். இதில் காலம்தாழ்த்தினால் பயிர்களுக்கும் எங்களுக்கும் எந்த பயனும் இல்லை. இத்தனை மாதமாக அதிகாரிகள் ஏமாற்றி வருவதை இனியும் ஏற்க முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனை தொடர்ந்து கலெக்டர் கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது விரைவில் தள்ளுபடி செய்து ரசீது வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால், விவசாயிகள் இந்த வாக்குறுதியை இனியும் ஏற்கமுடியாது. அதிகாரிகள் உங்கள்முன் பேசுவது ஒன்று எங்களிடம் நடப்பது வேறு என்று குரல் எழுப்பினர். மேலும், எழுத்து மூலமாக உறுதி அளிக்க வேண்டும் என்று பிடிவாதமாக அங்கிருந்து செல்ல மறுத்து முற்றுகையிட்டனர்.

முற்றுகை

இதனை தொடர்ந்து கூட்டுறவு துறை அதிகாரிகள் வருகிற 12-ந் தேதி முதல் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அதன்பின் தகுதியானவர்களுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும் என்று எழுத்துபூர்வமாக வழங்கினர்.

இதனை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஏராளமான விவசாயிகள் கலெக்டரை முற்றுகையிட்டு கோரிக்கையை வலியுறுத்தி கலைந்து செல்ல மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story