செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை முயற்சி
வாழப்பாடி:-
வாழப்பாடி அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற விவசாயியை தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
நிலப்பிரச்சினை
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 55), விவசாயி. வரதராஜனுக்கும், அவருடைய சகோதரர் ராமசாமி என்பவருக்கும் நிலப்பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று மதியம் வரதராஜன் வாழப்பாடி அருகே மன்னாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் செல்போன் கோபுர பகுதிக்கு வந்தார்.
பின்னர் அவர் திடீரென செல்போன் கோபுரத்தில் ஏறினார். இதையடுத்து தான் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். வரதராஜனின் குடும்பத்தினரும் அங்கு வந்தனர்.
இதுதொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வாழப்பாடி தீயணைப்பு வீரர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி தலைமையிலான வாழப்பாடி போலீசார் செல்போன் கோபுரத்தில் நின்ற வரதராஜனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பரபரப்பு
அப்போது தீயணைப்பு வீரர் ஒருவர் செல்போன் கோபுரத்தின் மீது ஏற முயன்றார். இதை பார்த்த வரதராஜன் என்னை காப்பாற்ற முயற்சி செய்தால் செல்போன் கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி குதிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வரதராஜனை காப்பாற்றுவதற்காக செல்போன் கோபுரத்தை சுற்றிலும் வைக்கோல் கட்டுகளை அடுக்கினர். பின்னர் சிறிது நேரத்தில் கடும் வெயிலால் சோர்வடைந்த வரதராஜன் படுத்தபடி இருந்தார். இதனை சாதுரியமாக பயன்படுத்திய தீயணைப்பு வீரர்கள் செல்போன் கோபுரத்தின் மீது ஏறினர். இதையடுத்து வரதராஜனின் இடுப்பில் கயிறு கட்டி அவரை பத்திரமாக கீழே மீட்டு கொண்டு வந்தனர்.
பின்னர் நிலப்பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த போலீசார், வரதராஜனை எச்சரித்து அவருடைய குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். நிலப்பிரச்சினையில் விவசாயி ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.