விஷம் குடித்து விவசாயி தற்கொலை முயற்சி
அறந்தாங்கி அருகே வங்கி ஊழியர்கள் பணத்தை கட்டுமாறு வற்புறுத்தியதால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுய உதவிக்குழு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பம் (வயது 58). இவருடைய மகள் செல்வி (35). இவர்கள் அப்பகுதியில் சுய உதவிக்குழு போன்று ஏற்படுத்தி தனியார் வங்கிகளில் குழுவிற்காக பணம் வாங்கி கொடுக்கும் பணியை செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சில தனியார் வங்கிகளில் ரூ.40 லட்சத்தை சுயஉதவிக்குழுவில் உள்ள 40-க்கும் மேற்பட்ட நபர்கள் மூலம் எடுத்து வாங்கி உள்ளனர். மேலும் இந்த பணத்தை நாங்கள் கட்டுகிறோம். நீங்கள் செலுத்த வேண்டாம் என்று புஷ்பம் மற்றும் அவரது மகள் செல்வி ஆகியோர் குழு உறுப்பினர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது.
கலெக்டரிடம் மனு
தொடர்ந்து 9 மாதம் பணம் செலுத்தி வந்த வேளையில் திடீரென்று புஷ்பம் மற்றும் அவருடைய மகள் செல்வி ஆகியோர் பணத்தை கட்டாததால் தனியார் வங்கி ஊழியர்கள் பணம் வாங்கிய சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வீட்டுக்கு சென்று கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் புஷ்பம் மற்றும் அவரது மகள் செல்வி ஆகியோரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் பணம் கட்ட முடியாது. அந்த தொகை உங்களது வங்கி கணக்கில் தான் ஏறியது. நாங்கள் அந்த பணத்தை வாங்கவில்லை என கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுய உதவிக்குழு உறுப்பினர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் மாவட்ட கலெக்டரிடம் கடந்த 15 நாட்களுக்கு முன்பு புகார் மனு அளித்துள்ளனர்.
விவசாயி விஷம் குடித்தார்
இந்த நிலையில் தனியார் வங்கி ஊழியர்கள் வீட்டில் வந்து பணத்தை கட்டுங்கள் என்று வற்புறுத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளான சுப்ரமணியபுரத்தை சேர்ந்த விவசாயி நீலகண்டன் (42) என்பவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரது உறவினர்கள் நீலகண்டனை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் வங்கி ஊழியர்களை கண்டித்து விஜயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தலைமையில் சுப்ரமணியபுரம் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.