விவசாயி அடித்துக்கொலை; வாலிபருக்கு ஆயுள் தண்டனை
நிலத்தகராறில் விவசாயியை அடித்துக்கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையத்தை அடுத்த அக்கராப்பாளையத்தை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது 52), விவசாயி. இவருக்கும் ஊத்தோடைகாடு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த வேலாயுதம் குடும்பத்திற்கும் நிலத்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஆசைத்தம்பி, தனது வயலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வேலாயுதம் மகன் சார்லஸ் (19), அவரது சகோதரர் சேவியர், வேலாயுதம், இவரது மனைவி சகாயமேரி ஆகியோர் சேர்ந்து முன்விரோதத்தை மனதில் வைத்து ஆசைத்தம்பியை வழிமறித்து சாதி பெயரை சொல்லி திட்டியதோடு உருட்டுக்கட்டையாலும், கடப்பாறையாலும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஆசைத்தம்பி சம்பவ இடத்திலேயே இறந்தார். இச்சம்பவம் கடந்த 2014-ல் நடந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சார்லஸ், சேவியர், வேலாயுதம், சகாயமேரி ஆகியோர் மீது கச்சிராயப்பாளையம் போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.
வாலிபருக்கு ஆயுள் தண்டனை
இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பாக்யஜோதி, குற்றம் சாட்டப்பட்ட சார்லசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தும், மற்ற 3 பேரை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட சார்லஸ், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கோதண்டபாணி ஆஜரானார்.