தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது 53). விவசாயி. இவரது முதல் மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். தற்போது இரண்டாவது மனைவி சங்கீதாவுடன் வசித்து வந்தார். முதல் மனைவிக்கு ஒரு மகனும், ஒரு மகளும், இரண்டாவது மனைவிக்கு ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் குடும்பத்தில் சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காமராஜ் ஒதியம் கிராமத்தில் உள்ள புதுஏரிக்கு சென்று ஆட்டிற்கு தழைகளை கொண்டு வருவதாக வீட்டில் கூறிச்சென்றுள்ளார்.
பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் புதுஏரி பகுதிக்கு சென்று தேடிப்பார்த்துள்ளனர். அப்போது காமராஜ் ஆலமரத்தில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியுள்ளார். இது குறித்து சங்கீதா கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து காமராஜின் உடலை ைகப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.