ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதல் விவசாயி பலி
தியாகதுருகத்தில் ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதல் விவசாயி பலி பெண் உள்பட 5 பேர் படுகாயம்
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் அருகே திம்மலை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 50) ஆட்டோ டிரைவரான இவர் நேற்று தனது ஆட்டோவில் திம்மலையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தியாகதுருகம் நோக்கி சென்று கொண்டு இருந்தார். பெரியமாம்பட்டு கொல்லந்தாங்கள் பிரிவு சாலை அருகே வந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாரதவிதமாக ஆட்டோ மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இதில் ஏழுமலை மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த விளக்கூர் ஊராட்சி வி.புதூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கந்தன்(46), பெரியமாம்பட்டு பாலன்(75), காட்டுக்கொட்டாய் பகுதி துரைசாமி மனைவி பச்சையம்மாள்(65) மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்கடாசலம் மகன் கவுசிக்(21), பின்னால் அமர்ந்து வந்த பரமத்திவேலூர் வீரகுட்டை கிராமம் குணசேகர் மகன் மேகநாதன்(19) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தியாகதுருகம் போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கந்தன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் கவுசிக் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கவுசிக் மற்றும் மேகநாதன் ஆகியோர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.