மின்சாரம் தாக்கி விவசாயி பலி
எடப்பாடி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
எடப்பாடி:-
எடப்பாடி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
விவசாயி
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வேம்பனேரி கிராமம் கருப்பன் தெருவை சேர்ந்தவர் சிங்காரவேல் (வயது 55). விவசாயி. இவருடைய மனைவி சின்னபொண்ணு. இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்தநிலையில் சிங்காரவேல் நேற்று தனது விவசாய நிலத்திற்கு சென்றார். அங்கு செழித்து வளர்ந்து காணப்பட்ட சோளப்பயிர்களை அறுவடை செய்தார். பின்னர் அறுவடை பணிகளை முடித்து கொண்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
மின்சாரம் தாக்கி பலி
தொடர்மழை காரணமாக அந்த பகுதியில் மின் கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்தது. இதனை கவனிக்காத சிங்காரவேல், மின் கம்பியை மிதித்தார். அப்போது அவரை மின்சாரம் தாக்கி, தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிங்காரவேல் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அந்த பகுதியில் திரண்டனர். அவர்கள் மின்சாரம் தாக்கி பலியான சிங்காரவேல் உடலை பார்த்து கதறி அழுதனர். எடப்பாடி போலீசார் அங்கு விரைந்து சென்று, சிங்காரவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நிவாரணம் வழங்க கோரிக்கை
மேலும் எடப்பாடி தாசில்தார் லெனின் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிங்காரவேல் குடும்பத்தினர் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் குறித்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எடப்பாடி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி, மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.