மின்னல் தாக்கி விவசாயி பலி
குன்னம் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலியானார்.
மின்னல் தாக்கி விவசாயி பலி
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் சாத்தனூர் மற்றும் குடிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. அப்போது சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகன் (வயது 43) என்பவர் இலுப்பைக்குடி- சிறுவாச்சூர் சாலையில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.
இந்தநிலையில் சாத்தனூர் பெரிய ஏரி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த போது இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது எதிர்பாராதவிதமாக முருகன் மீது மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே முருகன் பரிதாபமாக இறந்தார்.
பிரேத பரிசோதனை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்னல் தாக்கி பலியான முருகனுக்கு காயத்ரி என்ற மனைவியும், சீதா என்ற மகளும், சிவா என்ற மகனும் உள்ளனர்.