ஆன்லைன் ரம்மி விளையாட்டால் கொள்ளையனாக மாறிய விவசாயி-ரூ.50 லட்சத்தை இழந்ததால் மூதாட்டியை தாக்கி நகை பறித்ததாக பரபரப்பு வாக்குமூலம்
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.50 லட்சத்தை இழந்ததால் கடனை அடைக்க முடியாமல் மூதாட்டியிடம் கொள்ளையடித்ததாக விவசாயி கண்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆத்தூர்:
மூதாட்டியிடம் நகை பறிப்பு
ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் காமராஜர் காலனியை சேர்ந்த அங்கமுத்து மனைவி செல்லம்மாள் (வயது 72). கடந்த 1-ந் தேதி விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் தனியாக இருந்த செல்லம்மாளை ஒருவர் தாக்கி 15 பவுன் நகையை பறித்து சென்றார். காயம் அடைந்த செல்லம்மாள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வாலிபர் கைது
விசாரணையில் ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் பள்ளக்காடு பகுதியை சேர்ந்த சின்னதுரை என்பவருடைய மகன் கண்ணன் (30), செல்லம்மாளிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனே போலீசார் கண்ணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
மேலும் அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் எனக்கு ஆர்வம் உண்டு. எங்களுக்கு சுமார் 8 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. விவசாய நிலத்தில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு ஆன்லைன் ரம்மி விளையாடுவேன். இதனால் எனக்கு ஏகப்பட்ட இழப்பு ஏற்பட்டது. அப்படி இருந்தும் எப்படியாவது இழந்த பணத்தை மீட்டு விடலாம் என நினைத்து மீண்டும் மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாடினேன்.
ரூ.50 லட்சம்
ஒரு கட்டத்தில் கொஞ்சம், கொஞ்சமாக ரூ.50 லட்சத்தை தாண்டியது. எனது வீட்டில் வாங்கியது மட்டும் அல்லாமல் ஏராளமானவர்களிடம் கடனும் வாங்கி ஆன்லைன் விளையாட்டில் இழந்தேன். எனவே கடன்காரர்கள் என்னை நெருக்க தொடங்கினார்கள். அவர்களிடம் இருந்து மீள வேண்டும். கடனை அடைக்க வேண்டும் அதற்கான தீர்வு கொள்ளையடிப்பது என முடிவு செய்தேன்.
அப்போது தனியாக இருக்கும் பெண்களிடம், அதிலும் மூதாட்டிகளிடம் கொள்ளையடித்தால் நம்மை யாரும் கண்டுபிடிக்க முடியாது என நினைத்தேன். கடைசியாக செல்லம்மாளை தாக்கி நகையை பறித்தேன். போலீசில் சிக்கிக்கொண்டேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
கொள்ளையனாக மாற்றிய ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இதுவரை 50 பேர் வரை பணத்தை இழந்ததுடன் உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளனர். எனவே ஆன்லைன் ரம்மிக்கு தடை கேட்டு சட்டசபையில் சட்டம் இயற்றி கவர்னருக்கு மசோதா அனுப்பப்பட்டுள்ளது. அதில் இன்னமும் கவர்னர் முடிவு எடுக்கவில்லை.
இதற்கிடையே ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்து வந்த விவசாயி கண்ணன், இன்று ஆன்லைன் ரம்மியால் கடனாளி ஆகி இருப்பதுடன், அந்த கடனை அடைக்க கொள்ளையனாக மாறி இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.