விளை நிலங்களில் பசுந்தாள் உர பயிர்களை பயிரிட்டு விவசாயிகள் பயன் அடையலாம்


விளை நிலங்களில் பசுந்தாள் உர பயிர்களை பயிரிட்டு விவசாயிகள் பயன் அடையலாம்
x

சாகுபடிக்கு முன்பு விளை நிலங்களில் பசுந்தாள் உர பயிர்களை பயிரிட்டு விவசாயிகள் பயன் அடையலாம் என விதைச்சான்று உதவி இயக்குனர் கூறினார்.

திருவாரூர்

சாகுபடிக்கு முன்பு விளை நிலங்களில் பசுந்தாள் உர பயிர்களை பயிரிட்டு விவசாயிகள் பயன் அடையலாம் என விதைச்சான்று உதவி இயக்குனர் கூறினார்.

பசுந்தாள் உரப்பயிர்கள்

நன்னிலம் அருகே மூங்கில்குடியில் உள்ள அரசு விதைப்பண்ணையில் விதைக்காக சாகுபடி செய்யப்பட்டுள்ள பசுந்தாள் உரப்பயிரான தக்கை பூண்டு பயிர்களை திருவாரூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் ஜெயப்பிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மண்வளத்தை பெருக்க கரிம அளவு முக்கிய பங்கு வகிக்கிறது. தழைச்சத்துகளில் அதிகளவில் கரிம சத்துகள் உள்ளதால், பயிர்கள் சாகுபடிக்கு முன் பசுந்தாள் உரங்களை பயிரிட்டு, உழவு செய்ய வேண்டும்.

மடக்கி உழவு செய்ய வேண்டும்

தக்கை பூண்டு, சணப்பை, கொழுஞ்சி மற்றும் மணிலா அகத்தி உட்பட பல்வேறு வகையான பசுந்தாள் உரப்பயிர்கள் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றை, ஏக்கருக்கு, 15 கிலோ விதைகள் வீதம் விதைத்து, செடிகள் நன்கு வளர்ந்து பூக்கும் பருவத்தில் நிலத்துடன் மடக்கி உழவு செய்துவிட வேண்டும். பசுந்தாள் உரங்களில் தழைச்சத்துகள் அதிகளவில் காணப்படுவதால் மண்ணில் உள்ள கரிம அளவு உயர்கிறது. மண்புழுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதனால், மண்ணின் அடர்த்தி குறைந்து உழவு ஓட்டுவது முதல், சாகுபடிக்கான அனைத்து பணிகளும் சுலபமாகி, கூலி ஆட்களின் தேவையும் குறைந்து, செலவும் கணிசமாக குறைகிறது.

பயன் கிடைக்கிறது

பயிரிடப்படும் பசுந்தாள் உரங்கள் மக்கும் போது சிறந்த இயற்கை உரமாக மாறுகிறது. இதனால், மற்ற பயிர்கள் சாகுபடியின் போது ரசாயன உர பயன்பாட்டை குறைத்து தேவையற்ற செலவுகள் குறைவதால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பும் கட்டுப்படுத்தப்பட்டு பயன் கிடைக்கிறது. பசுந்தாள் உரம் சாகுபடிக்கு பெரியளவு பராமரிப்பு மற்றும் செலவு தேவையில்லை என்பதால் விவசாயிகள் கட்டாயமாக இதனை பயிரிட வேண்டும். தற்போது தண்ணீர் பாய வசதியில்லாமல் குறுவை சாகுபடி செய்யாத விவசாயிகள் சம்பா நெல் பயிர் சாகுபடிக்கு ஒரு மாதத்துக்கு முன் பசுந்தாள் உர விதையினை விதைத்து அது பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்தால் மண் வளத்தை காத்து அதிக லாபம் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது அரசு விதைப்பண்ணை வேளாண்மை அலுவலர்கள் சந்தோஷ் குமார், விதைச் சான்று அலுவலர்கள் பிரபு, திருப்பதி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story