சிறுதானிய பயிர்களை பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும்- வேளாண்மை உதவி இயக்குனர்
சிறுதானிய பயிர்களை பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும் என்று சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
சிறுதானிய பயிர்களை பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும் என்று சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
குறுவை தொகுப்பு திட்டம்
டெல்டா மாவட்டத்தில் குருவை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி குருவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு அரசின் மானியத்தில் உதவி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் நிலக்கடலை, கேழ்வரகு, உளுந்து, ராகி உள்பட சிறுதானிய ரக விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருவெண்காட்டில் விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு, சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் தலைமை தாங்கினார். உதவி அலுவலர் வேதைராஜன் வரவேற்றார்.
சிறுதானிய பயிர்கள்
நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு சிறுதானிய ரக விதைகளை வழங்கி வேளாண் உதவி இயக்குனர் கூறியதாவது:-
குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தின்கீழ், சிறு தானிய பயிர்களான நிலக்கடலை, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட ஏதுவாக மானிய விலையில் விதைகள், இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.அதன்படி தற்போது சீர்காழி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகளை வழங்கி வருகிறோம். ஆகவே, சிறுதானிய பயிர்களை பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும். இந்த திட்டம் குறித்து மேலும் அறிய வேளாண்மை உதவி அலுவலர்களை சந்தித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், வேளாண்மை உதவி அலுவலர் ரவிச்சந்திரன், திருவெண்காடு கிடங்கு மேலாளர் ரம்யா மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண்மை உதவி அலுவலர் அலெக்சாண்டர் நன்றி கூறினார்.