சாகுபடி வயலில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் விவசாயிகள் அச்சம்
சீர்காழி அருகே சாகுபடி வயலில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் விவசாயிகள் அச்சமடைந்து உள்ளனர். அதை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே சாகுபடி வயலில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் விவசாயிகள் அச்சமடைந்து உள்ளனர். அதை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாகுபடி செய்த வயல்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அகர எலத்தூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் தற்போது விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சோத்திரியம் பகுதியில் உள்ள குறுவை சாகுபடி செய்த வயலில் இருந்த மின்கம்பத்தில் உள்ள மின்கம்பிகள், நேற்று முன்தினம் காலை திடீரென அறுந்து வயலில் விழுந்தது. இதனால் விவசாயிகள் யாரும் வயல் பகுதிக்கு செல்லாமல் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோத்திரியம் பகுதி சாகுபடி வயலில் அறுந்து கிடக்கும் மின் கம்பியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
மின்கம்பி அறுந்து விழுந்தது
மேலும் மின்சாரத்தை உடனே துண்டிக்க வேண்டும் என விவசாயிகள் அச்சத்துடன் தெரிவித்தனர். இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், நேற்று முன்தினம் சோத்திரியம் பகுதியில் குறுவை சாகுபடி செய்த வயலில் இருந்த மின்கம்பத்தில் இருந்து மின்கம்பிகள் மின்சாரத்துடன் அறுந்து வயலில் விழுந்து கிடக்கிறது.
இதனால் விவசாயிகள் வயலுக்குள் சென்றால் மின்சாரம் தாக்கி உயிர் இழப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் யாரும் வயல்வெளி பகுதிக்கு செல்லாமல் இருந்து வருகிறோம். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விபத்து ஏற்படுவதற்குள் அறுந்து கிடக்கும் மின்கம்பியை சீரமைத்து தர வேண்டும் என்றனர்.