260 குளங்களில் விவசாயிகள் வண்டல் மண் அள்ள அனுமதி


260 குளங்களில் விவசாயிகள் வண்டல் மண் அள்ள அனுமதி
x

தூத்துக்குடி மாவட்டத்தில் 260 குளங்களில் விவசாயிகள் வண்டல் மண் அள்ள அனுமதி அளிக்கப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 260 குளங்களில் விவசாயிகள் வண்டல் மண் அள்ள அனுமதி அளிக்கப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவகாமி, தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், கோரம்பள்ளம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் முத்துராணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாச்சியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவசாயிகள் கோரிக்கை

கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது, கடம்பாகுளம் பகுதியில் தண்ணீர் வரத்து இல்லாமல் பயிர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஆகையால் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களை விவசாயிகள் சங்கம் மூலம் நடத்த வேண்டும், கடம்பா குளம் சீரமைக்க ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆகையால் மழைக்காலத்துக்கு முன்பு சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும். சடையநேரி குளத்தில் இருந்து விவசாயிகள் பெயரில் போலியாக சீட்டு பெற்று, வணிக நோக்கில் மண் அள்ளப்பட்டு வருகிறது. இதனை தடுக்க ஆய்வு செய்ய வேண்டும்.

கூட்டுறவு வங்கி மோசடி

உடன்குடி கூட்டுறவு வங்கியிலும் மோசடி நடந்து உள்ளது. ஆகையால் அனுபவம் வாய்ந்த அதிகாரி மூலம் விசாரணை நடத்த வேண்டும். கிசான் கடன் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் கோடை உழவுக்கு மானியம் வழங்க வேண்டும், மலர்க்குளத்துக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும், உடன்குடி பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கடம்பாகுளம் பிரதான வடிகாலை மழைக்காலத்துக்கு முன்பு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாகுபடி குறைந்தது

தற்போது ஒட்டு ரக நெல் விதைகள் வேளாண்மைத்துறையால் வழங்கப்படுகிறது. இந்த நெல் ரகங்கள் பெரும்பாலும் பூச்சி தாக்குதலுக்கு ஆளாகின்றன. பல மருந்துகள் தெளித்தும் மகசூல் பெற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நெல் சாகுபடி பரப்பு குறைந்து உள்ளது. ஆகையால் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை வழங்க வேண்டும். உடன்குடி அனல்மின்நிலையத்துக்கு கூடுதலாக 2 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளதாக தெரிகிறது. இதில் விவசாய நிலங்களை எடுக்க கூடாது. தாமிரபரணியில் சீவலப்பேரியில் இருந்து பூவானி வழியாக வைப்பாறுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். விடுபட்டவர்களுக்கு விரைந்து காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கலெக்டர் செந்தில்ராஜ்

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பேசும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் இனிமேல்தான் மழைக்காலம் தொடங்க உள்ளது. போதுமான அளவு விதை கொள்முதல் செய்யப்படுகிறது. உரம் போதுமான அளவு கையிருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் புதிதாக 120 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. வேளாண் வணிக பிரிவு சார்பில் ஒரு மாவட்டத்துக்கு ஒரு பயிர் என்ற அடிப்படையில் பனை பொருட்கள் உற்பத்திக்கு கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அனைத்து பயிர்களுக்கும் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் விவசாயிகள் விண்ணப்பித்து மானிய கடன் உதவி பெறலாம். வில்லிசேரி, பழையகாயல் கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடந்து உள்ளது. அதில் உள்ள நகைகளை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பழையகாயல் கூட்டுறவு சங்க நிர்வாகத்தை கலைத்து விட்டு புதிதாக அமைக்க உத்தரவு வந்து உள்ளது.

260 குளங்கள்

பாசிப்பயறு, கம்பு, எள், சோளம், சூரியகாந்தி, பருத்தி, மிளகாய் உள்ளிட்ட பயிர்களுக்கு ரூ.50 கோடி காப்பீடு தொகை வராமல் இருந்தது. அதனை மாநில அரசே வழங்குவதாக அறிவித்து உள்ளது. அந்த தொகை ஒரு மாதத்துக்குள் வழங்கப்படும். கடந்த ஆண்டு 17 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இருந்தன. இந்த ஆண்டு விவசாயிகள் கேட்கும் இடங்களில் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் விவசாயிகள் வண்டல் மண் அள்ளுவதற்காக 260 குளங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த குளங்களில் மண் பரிசோதனை செய்யப்பட்டு விவசாயிகள் இலவசமாக மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. ஒரே நேரத்தில் விவசாயிகள் மண் அள்ளிக் கொண்டால், கண்காணிப்பதற்கு வசதியாக இருக்கும். கடம்பாகுளம், கோரம்பள்ளம் குளம் தூர்வார அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளை மழைக்காலத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். விதைகள் வினியோகத்தில் குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு சூரிய ஒளி மின்உற்பத்தி, காற்றாலை மின்சாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் சோலார் மின்உற்பத்தி எந்திரம் அமைக்க அறிவுறுத்தி உள்ளது. மண் கொள்ளையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


Next Story