சம்பா-தாளடி நடவு பணியில் விவசாயிகள் மும்முரம்
சம்பா-தாளடி நடவு பணியில் விவசாயிகள் மும்முரம்
கொரடாச்சேரி பகுதியில் சம்பா-தாளடி நடவு பணியில் விவசாயிகள் மும்முரமாக நடந்தது.
சம்பா-தாளடி நடவு பணி
காவிரி டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கொரடாச்சேரி பகுதியில் குறுவை சாகுபடியை விவசாயிகள் முடிந்துள்ளனர். தற்போது சம்பா-தாளடி நடவு பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மழை பெய்ய தொடங்கி விட்டால் சாகுபடி பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும்.
இதனை கருத்தில் கொண்டு பருவமழை தீவிரமடைவதற்குள் நடவு பணிகளை முடித்து விட வேண்டும் என விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதுவரை பணிகள் நடைபெறாமல் உள்ள சம்பா நெல் வயல்களில் நடவு பணிகள் மும்முரம் அடைந்துள்ளது. கூடுதல் பணியாளர்களை பணிக்கு அமர்த்தி நடவு பணிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
இதேபோல் தாளடி நெல் விவசாயத்திற்கு வயல்களை தயார் செய்யும் பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு தொடர்ந்து வயல்வெளிகளில் தண்ணீர் பாசனம் நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் ஆர்வமுடன் குறுவை நெல் சாகுபடியை மேற்கொண்டனர். தொடர்ந்து சம்பா, தாளடி நெல் சாகுபடியிலும் கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆறுகளில் தண்ணீர் வருவதோடு பருவமழையும் சரிவர பெய்யும் என்பதால் விவசாயிகள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேவையான உரம்
இந்த நெல் சாகுபடி பணிகள் தடையின்றி நடைபெற தேவையான உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவைகளை இருப்பில் வைத்து வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.