நீடித்த நவீன கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்
வாணாபுரம் பகுதிகளில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வாணாபுரம்
வாணாபுரம் பகுதிகளில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயம்
வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர், சின்னகல்லப்பாடி, பெரிய கல்லப்பாடி, பெருமனம், விருதுவிளங்கினான், மழுவம்பட்டு, வாழவச்சனூர், அகரம்பள்ளிப்பட்டு, சதாகுப்பம், மெய்யூர், காம்பட்டு, பெருந்துறைபட்டு, நவம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது.
இப்பகுதி விவசாயிகள் பெரும்பாலும் நெல், கரும்பு மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்களும் காய்கறி பயிர்களும், பூக்கள் வகையான பயிர்களை அதிகளவில் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இப்பகுதி விவசாயிகள் அதிகளவில் கரும்பு பயிர்களை பல்லாயிரக்கணக்கான ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகின்றனர்.
10 முதல் 12 மாதங்கள் வரை பராமரிக்கப்படும் கரும்பு பயிர்களை பல்வேறு ரகங்கள் கொண்ட கரும்புகளை நடவு செய்து அதனை விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.
மாற்றங்கள்
பெரும்பாலும் இப்பகுதி விவசாயிகள் கரும்பு பயிரிடுவதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் கரும்பு பயிர்களை நடவு செய்யும் விவசாய நிலங்களில் 4 அடி முதல் 6½ அடி வரை உழவு செய்து அதில் கரும்பு நடவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பயிரிடப்பட்ட கரும்பு பயிர்கள் நன்கு வளர்ந்து காணப்படுகிறது இதனை தற்போது விவசாயிகள் சோகை நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
இப்பகுதியில் பெரும்பாலும் கரும்பு பயிர்களை அதிகளவில் பயிரிடப்பட்டு பராமரித்து வருகிறோம். நாங்கள் பயிரிடப்படும் கரும்பு பயிர்களில் அதிக அளவில் மாற்றத்தை ஏற்படும் வகையில் நிலத்தின் மண் தன்மைக்கு ஏற்ற கரும்புகளை பயிரிடுகிறோம்.
இப்பகுதிகளில் பெரும்பாலும் பல வகை தன்மை கொண்ட கரும்புகளை பயிரிடப்பட்டு பராமரித்து வரும் நிலையில் இப்பொழுது கருப்பு சோகை நீக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இதனால் நீடித்த நவீன கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.
ரூ.4 ஆயிரம்
குறிப்பாக சோகையை நீக்குவதால் கரும்புகள் நன்கு வளர்கிறது. காற்றோட்டமாக இருப்பதினால் வளர்ச்சியும் அதிகரிக்கிறது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு கரும்பு விலை கிடைப்பது கிடையாது.
இப்பகுதிகளில் இருக்கும் கூட்டுறவு ஆலைகளுக்கும் தனியார் ஆலைகளுக்கும் கரும்புகளை அறுவடை செய்து அனுப்பினால் அவர்கள் எதிர்பார்த்த அளவு தொகை வழங்குவது கிடையாது எனவே கரும்பு விவசாயிகளின் கோரிக்கையான டன் ஒன்றுக்கு குறைந்தது ரூ.4 ஆயிரம் வழங்கினால் செலவு செய்து பயிரிடப்பட்ட தொகையாவது கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.