உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொள்முதல் செய்யப்பட்ட விளை பொருட்களுக்கு உரிய பணம் பெரும்பாலான விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இது குறித்து பல முறை கேட்டும் விவசாயிகளுக்கு உரிய பணத்தை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் தங்களுக்கு உடனே பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபடப்போவதாக கூறி சென்றனர். அவர்களை உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வம் தலைமையிலான போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.