சாலையில் பால் ஊற்றி விவசாயிகள் போராட்டம்
வளையப்பட்டி பகுதியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலையில் பால் ஊற்றி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
மோகனூர்
சிப்காட் அமைக்க எதிர்ப்பு
மோகனூர் ஊராட்சி ஒன்றியம் வளையப்பட்டி, அரூர், பரளி, என்.புதுப்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் தமிழக அரசு சார்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. இதையொட்டி வளையப்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் தொழிற்பேட்டைக்கான நில அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே உண்ணாவிரதம், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம், மனிதசங்கிலி, நெற்றியில் நாமம் போட்டும், அக்னி சட்டி ஏந்தி போராட்டம் உள்ளிட்ட பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பால் ஊற்றி போராட்டம்
இந்தநிலையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை கைவிடக்கோரி வளையப்பட்டி வருவாய் அலுவலர் அலுவலகம் அருகில் சாலையில் பாலை ஊற்றி போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். இதில் சிப்காட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு ராம்குமார், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், விவசாய அணி அமைப்பாளர் பரமசிவம் மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க., கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் உள்பட விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.