தென்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
தென்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி குளித்தலையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாய்க்கால்கள்
கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையில் இருந்து தென்கரை மற்றும் கட்டளை மேட்டு வாய்க்கால்கள் மூலம் விவசாயம் மற்றும் குடிநீருக்காக ஆண்டுதோறும் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
இந்த வாய்க்கால் பாசனம் மூலம் மாயனூர், லாலாபேட்டை, குளித்தலை மற்றும் வாய்க்கால்கள் செல்லும் வழியில் உள்ள பல்வேறு ஊர்களில் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த மாதம் முதல் தண்ணீர் இருப்புக்கு ஏற்றவாறு வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.
காத்திருப்பு போராட்டம்
சுமார் 25 நாட்களுக்கு மேலாக தென்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் தென்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி குளித்தலை பெரிய பாலத்தில் உள்ள ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறிய அலுவலகத்திற்கு பல்வேறு ஊர்களை சேர்ந்த விவசாயிகள் நேற்று வந்திருந்தனர். மேலும் அவர்கள் உடனடியாக தண்ணீர் திறக்கக் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
அப்போது அங்கு வந்த குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. இதுகுறித்து ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் சிங்காரவேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உதவி செயற்பொறியாளர் நாளை (சனிக்கிழமை) தென்கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இருந்த அலுவலர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து விவசாயிகளிடம் நாளை தண்ணீர் திறக்கப்படும் என அலுவலர்கள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.