விழுப்புரம் அருகே முத்தாம்பாளையம் ஏரி பாசன மதகு உடைப்பு விவசாயிகள் அதிர்ச்சி
விழுப்புரம் அருகே முத்தாம்பாளையம் ஏரி பாசன மதகு உடைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விழுப்புரம் அருகே முத்தாம்பாளையத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. மழைக்காலத்தில் இந்த ஏரிக்கு வரும் தண்ணீர் மூலம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இங்குள்ள விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், முத்தாம்பாளையம் ஏரியில் உள்ள மதகில் பாசனத்தின்போது திறந்து மூடும் அளவிற்கு பலமாகவும் நேர்த்தியாகவும் இருக்கும் வகையில் பொதுப்பணித்துறை சார்பில் திருகுமுறை மதகு பொருத்தி கொடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதி விவசாயிகள், பல ஆண்டுகளுக்குப்பிறகு மகிழ்ச்சியுடன் இந்த வருடம் ஏரி நீர் பாசனத்தை நம்பி பயிர் செய்துள்ளனர். அவ்வப்போது விவசாய தேவைக்கு மட்டும் சீராக தண்ணீர் திறந்து பாசனம் செய்து வருகின்றனர்.
பாசன மதகு உடைப்பு
இந்த ஏரி பாசனத்தை நம்பி பயிர் செய்துள்ள நெற்பயிர்களை இன்னும் சில மாதங்களில் விவசாயிகள் அறுவடை செய்ய தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏரியில் இருந்த மதகு உடைக்கப்பட்டுள்ளது. இதனை மீன் வளர்ப்பு குத்தகை எடுத்துள்ள நபர்கள், உடைத்து இடித்து தள்ளிவிட்டுள்ளதாக விவசாயிகள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த 2021-ல் மீன் வளர்ப்பு குத்தகை எடுத்தவர்கள் இதேபோல் அத்துமீறி மதகை உடைத்தார்கள். அவர்கள் மீது உடனடியாக புகார் கொடுக்கப்பட்டது. அதேபோல் மீண்டும் தற்போது ஏரியில் மீன் வளர்ப்பு குத்தகை எடுப்பவர்கள், தொடர்ந்து பாசன மதகிற்கு சேதம் ஏற்படுத்துவதால் பாசன தேவைக்கு தேக்கி வைத்துள்ள தண்ணீர் வீணடிக்கப்படுகிறது. இதனால் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் அப்பகுதி விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். கடந்த மாதம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், முத்தாம்பாளையம் ஏரி மறு குத்தகை விட்டது தொடர்பாக கொடுத்த மனுவின் மீது உரிய விசாரணை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது இந்தநிலை ஏற்பட்டிருக்காது என்று விவசாயிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
உரிய நடவடிக்கை
எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை நடக்காமல் இருக்க இந்த ஏரியின் மீன் வளர்ப்பு குத்தகையை முழுமையாக ரத்து செய்ய மீன்வளத்துறைக்கு பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) பரிந்துரை செய்ய வேண்டும் என்று விழுப்புரம் நீர்நிலைகள் மீட்பு கூட்டமைப்பினர், விழுப்புரம் கரிகால சோழன் பசுமை மீட்பு படையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.