கருகும் பயிர்களை காப்பாற்ற முடியாமல் பரிதவிக்கும் விவசாயிகள்
முத்துப்பேட்டை அருகே கருகும் பயிர்களை காப்பாற்ற முடியாமல் பரிதவித்து வரும் விவசாயிகள் குடத்தில் தண்ணீர் பிடித்து வயலில் ஊற்றி வருகிறார்கள்.
முத்துப்பேட்டை அருகே கருகும் பயிர்களை காப்பாற்ற முடியாமல் பரிதவித்து வரும் விவசாயிகள் குடத்தில் தண்ணீர் பிடித்து வயலில் ஊற்றி வருகிறார்கள்.
பயிர்கள் கருகின
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 14 ஆயிரம் எக்டேர் பரப்பில் விளை நிலங்கள் உள்ளன. இந்த ஆண்டு மேட்டூர் அணை கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்டாலும், கடைமடை பகுதியான முத்துப்பேட்டை பகுதிக்கு தண்ணீர் தாமதமாக வந்தது. ஆனாலும் இப்பகுதி விவசாயிகள் நம்பிக்கையுடன் நடப்பாண்டு குறுவை நெல் சாகுபடி பணிகளை தொடங்கினர்.
ஆனால் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக உட் கிராமங்களில் உள்ள கிளை ஆறுகள், பாசன வாய்க்கால்களை சென்றடையவில்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் தெளிக்கப்பட்ட விதைகள் முளைக்காமல் கருகியது. பல இடங்களில் முளைத்து பயிராக வளர்ந்தும் தண்ணீரின்றி அவை கருகி வீணானது. இதனால் விவசாயிகள் குறுவை பயிரை டிராக்டர் கொண்டு அழித்து விட்டு சம்பா சாகுபடியில் ஈடுபட தொடங்கினர். தற்போதும் தண்ணீர் பற்றாக்குறை நீடிப்பதால் சம்பா சாகுபடி பணியும் முடங்கி உள்ளது.
குடத்தில் தண்ணீர் பிடித்து ஊற்றி...
இந்தநிலையில் முத்துப்பேட்டை அருகே உள்ள ஆலங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் குறுவையை அழித்து விட்டு பயிரிடப்பட்ட சம்பா பயிர்களும் போதிய தண்ணீர் கிடைக்காமல் கருக தொடங்கி உள்ளன.
இதனால் விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற முடியாமல் பரிதவித்து வருகிறார்கள். குடத்தில் தண்ணீர் பிடித்து வயல்களில் ஊற்றி பயிர்களை காப்பாற்றும் முயற்சியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கருகும் பயிர்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.