எள் விலை குறைவால் விவசாயிகள் கவலை
வெம்பக்கோட்டை பகுதிகளில் எள் விலை குறைவால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை பகுதிகளில் எள் விலை குறைவால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
எள் சாகுபடி
வெம்பக்கோட்டை ஒன்றியம் குகன்பாறை, சத்திரம், வால்சாபுரம், கஸ்தூரி ரங்காபுரம், தாயில்பட்டி, கோதை நாச்சியார்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு எள் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்திற்கு விலை போனது. ஆதலால் இந்த ஆண்டு நல்ல விலை கிைடக்கும் என்ற ஆர்வத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் எள்ளை சாகுபடி செய்தனர். ஆனால் தற்போது விளைச்சலும் குறைந்தது. விலையும் குறைந்தது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
சாம்பல் நோய்
இதுகுறித்து குகன்பாறை விவசாயி புஷ்பராஜ் கூறியதாவது:-
கடந்த ஆண்டு தொடக்கத்தில் எள் விலை குறைவாக இருந்ததால் நஷ்டம் ஏற்படும் என நினைத்து சந்தேகத்தில் குறைவான அளவில் சாகுபடி செய்தோம். ஆனால் அறுவடை சமயத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஒரு குவிண்டாலுக்கு ரூ. 10 ஆயிரம் வரை விலை கிடைத்தது. இந்த ஆண்டும் அதேவிலை அல்லது அதற்கு மேல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சாகுபடி செய்தோம். தற்போது அறுவடை பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
கடும் வெப்பம் காரணமாக ஆரம்ப கட்டத்திலேயே எள் செடியில் இலைகள் சாம்பல் நோயினால் பாதிக்கப்பட்டது.
குவிண்டால் ரூ.6 ஆயிரம்
இதனால் விளைச்சல் குறைந்தது. கடந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு 6 முதல் 7 குவிண்டால் வரை கிடைத்தது. தற்போது நோய் தாக்குதலால் 4 குவிண்டால் தான் கிடைக்கிறது. அதேபோல குவிண்டால் தற்போது ரூ.6 ஆயிரத்திற்கு தான் விலை போகிறது.
விளைச்சல், விலை குறைவு காரணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை நஷ்டம் அடைந்துள்ளோம்.
ஆதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.