கருகிய பயிர்களுடன் முற்றுகையிட்ட விவசாயிகள்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பருவமழை பெய்யாததால் கருகிய பயிர்களுடன் நிவாரணம் கோரி விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பருவமழை பெய்யாததால் கருகிய பயிர்களுடன் நிவாரணம் கோரி விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கருகிய நெற்பயிர்களை கைகளில் ஏந்தியபடி பயிர் இழப்பீடு நிவாரண தொகை வழங்க கோரி திரளாக வந்து முற்றுகையிட்டனர்.
ராமநாதபுரம் அருகே உள்ள லாந்தை பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதாலும் எங்கள் கண்மாய்க்கு வைகை தண்ணீர் வராததாலும் நெற்பயிர்கள் அனைத்தும் கருகிவிட்டன. எனவே எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை பெற்றுத்தர வேண்டும். வரத்து கால்வாயை தூர்வாரி நிரந்தரமாக எங்கள் கண்மாய்க்கு வைகை தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
நிவாரணம் வழங்க கோரிக்கை
இதேபோல, தமிழக வைகை பாசன விவசாய சங்க தலைவர் பாக்கியநாதன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் கருகிய நெற்பயிர்களுடன் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் நேரடி விதைப்பின் மூலம் நெல்சாகுபடி செய்திருந்தோம். 90 நாட்கள் ஆன நிலையில் பயிர் கதிர்விடும் முன்னரே வடகிழக்கு பருவமழை பெய்யாமல் பயிர்கள் கருகிவிட்டன. பயிர்களை பிழைக்க வைக்க வழியின்றி கால்நடைகள் மேய்ந்து வருகின்றன. எனவே, பாதிக்கப்பட்ட மேற்கண்ட பகுதிகளை இயற்கை பேரிடராக அறிவித்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.32 ஆயிரம் வறட்சி நிவாரணமாகவும், 100 சதவீத பயிர்காப்பீடு இழப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.