விரைவாக தொடங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
பாதியில் நிறுத்தப்பட்ட துணை மின் நிலைய பணியை விரைவாக தொடங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே வடவாளம் பகுதியில் தொடர்ந்து மின்வெட்டு பிரச்சினையால் அடிக்கடி மின் மோட்டார்கள் பழுதடைந்து வந்தது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். மேலும் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மீண்டும் வருவதற்கு 3 நாட்களுக்கு மேலாக ஆகிவிடுகிறது. இதனை சரி செய்யும் வகையில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் வடவாளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து துணைமின் நிலையம் அமைப்பதற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணி தொடங்கப்பட்ட நிலையில் அப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட பணிகளை விரைவாக மீண்டும் தொடங்கக்கோரி புதுக்கோட்டை- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். இதற்கு வடவாளம் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த சம்பட்டி விடுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து செல்லாததால் அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் புதுக்கோட்டை- தஞ்சாவூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.