கடல்நீர் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
கடல்நீர் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
சீர்காழி,
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை காரணமாக கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் 22 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
இந்த தொடர் மழையாலும், கடலின் சீற்றம் காரணமாகவும் திருமுல்லைவாசல் பகுதியில் உள்ள உப்பனாற்று கரைகள் உடைக்கப்பட்டு கடல் நீர் விளைநிலங்களுக்குள் புகுந்தது.
விவசாயிகள் சாலைமறியல்
இதனால் திருமுல்லைவாசல், ராதாநல்லூர், விடுதலைக்குடி, வருஷப் பத்து உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்திருந்த சம்பா நெற்பயிர்கள் கடல் நீரால் முழுகி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களை அதிகாரிகள் பார்வையிட வராததை கண்டித்தும், உப்பனாற்று கரைகளை பலப்படுத்தாத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்தும் திருமுல்லைவாசல் சாலை வழுதலைகுடி என்ற இடத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி கோஷங்கள் எழுப்பினர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் நேரில் வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். சாலை மறியல் காரணமாக அந்த சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.