கலெக்டர் அலுவலகத்துக்கு கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகள்


கலெக்டர் அலுவலகத்துக்கு கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகள்
x

மானூர் பகுதி விவசாயிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு மழை இன்றி வாடிய பயிர்களுடன் வந்தனர். அவர்கள் இழப்பீடு கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.

திருநெல்வேலி

மானூர் பகுதி விவசாயிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு மழை இன்றி வாடிய பயிர்களுடன் வந்தனர். அவர்கள் இழப்பீடு கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு பொது மக்களிடம் இருந்து மனுக்களை வாங்கி நடவடிக்கை எடுக்க அந்தந்த துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கருகிய பயிருடன் விவசாயிகள்

இதில் தமிழக விவசாயிகள் சங்க மானூர் ஒன்றிய செயலாளர் ஆபிரகாம் தலைமையில் ஏராளமான விவசாயிகள் கலெக்டர் அலுவலத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது கையில் உளுந்து, நெல் உள்ளிட்ட கருகிய பயிர்களை எடுத்து வந்திருந்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் மானூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகலில் உளுந்து, நெல் பயிரிட்டோம். அதற்கு விவசாயிகள் காப்பீடும் செய்துள்ளனர். ஆனால் நடப்பு ஆண்டில் தற்போது போதிய மழை இல்லாமல் போனதால் குளங்கள் தண்ணீர் இன்றி கிடக்கின்றன. உளுந்து, நெல் பயிர்கள் கருகி, பட்டுப்போய் விட்டது. இதனால் விவசாயிகள் கடும் பொருளாதார இழப்புக்கு ஆளாகி உள்ளனர்.

வறட்சி பகுதி

எனவே மானூர் பகுதியை வறட்சி பகுதியாக அறிவித்து, விவசாயிகளுக்கு நிவாரண தொகையாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறிஉள்ளனர்.

கல்லூரி மாணவர்

திராவிட தமிழர் கட்சி திருக்குமரன், தமிழர் உரிமை மீட்பு களம் லெனின், விடுதலை சிறுத்தைகள் கட்சி முத்துவளவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சுடலைராஜ், ஆதித்தமிழர் பேரவை கலைகண்ணன், மக்கள் அதிகாரம் கிங்சன் மற்றும் மானூர் தெற்குப்பட்டி ஆட்டோ டிரைவர் சங்கரன் குடும்பத்தினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ''நெல்லை அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் என்னுடைய மூத்த மகன் அருண் படித்து வருகிறார். அவரை விடுதி காப்பாளர் சாதி பெயரை சொல்லி திட்டி அடித்துள்ளார். எனவே விடுதி காப்பாளர், உடற்கல்வி ஆசிரியர் ஆசிரியர், முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறிஉள்ளனர்.

புதிரை வண்ணார்

பூர்வீக தமிழர் கட்சி நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமையில் தமிழர் உரிமை மீட்பு களம் லெனின் உள்பட பலர் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை ணனு கொடுத்தனர். அதில், நெல்லை மாவட்டத்தில் அனைத்து தாலுகாக்களிலும் ஆதிதிராவிடர் பிரிவில் 'புதிரை வண்ணார்' சாதி சான்றிதழ் பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், வருவாய் துறை அதிகாரிகள் இதுதொடர்பாக நேரில் விசாரணை நடத்தி உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்" என்றனர்.

இந்து மக்கள் கட்சி

இந்து மக்கள் கட்சி தென் மண்டல தலைவர் ராஜா பாண்டியன், நெல்லை மாவட்ட தலைவர் மாரியப்பன் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், "இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி மீது போடப்பட்ட குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். அவரை விடுதலை செய்ய வேண்டும். இந்து அமைப்புகள் மீதும் இந்து தலைவர்கள் மீதும் பொய் வழக்கு மற்றும் குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்'' என்று கூறிஉள்ளனர்.

நெல்லை பேட்டை ரகுமான் பேட்டையை சேர்ந்த பக்கீர் மைதீன் மனைவி பல்கிஸ் பேகம் (வயது 63) என்பவர் குடும்பத்தினருடன் வந்து கொடுத்த மனுவில், ''தமிழக அரசின் விதவைகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். எனவே கலெக்டர் இதில் தலையிட்டு கணவரை இழந்த விதவைகளுக்கு உதவித்தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறிஇருந்தார்.


Next Story