குறுவை தொகுப்பு திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
குறுவை தொகுப்பு திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
சிக்கல்:
கீழ்வேளூர் வட்டாரத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார்.
இதுகுறித்து கீழ்வேளூர் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ராஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்விதைகள் இருப்பு உள்ளது
கீழ்வேளூர் வட்டாரத்தில் இதுவரை குறுவை சாகுபடி நேரடி நெல் விதைப்பு 3ஆயிரம் ஏக்கரிலும், சேற்று நேரடி விதைப்பு 2,500 ஏக்கரிலும் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து குறுவை விதைப்பு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு முன்கூட்டியே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் சென்ற ஆண்டை விட கூடுதலாக 15 ஆயிரம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் மற்றும் உயிர் உரங்கள் ஆகியவை கீழ்வேளூர் வட்டாரத்தில் உள்ள கீழ்வேளூர், தேவூர், கிள்ளுக்குடி, ஆந்தக்குடி, வலிவலம் ஆகிய 5 வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
சிறு,குறு விவசாயிகளுக்கு முன்னுரிைம
குறுவை விவசாயிகளை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு முழுவதும் மானிய விலையில் ஒரு மூட்டை யூரியா (45 கிலோ), ஒரு மூட்டை டி.ஏ.பி (50 கிலோ) மற்றும் அரை மூட்டை பொட்டாஷ் (25 கிலோ) உள்ளிட்ட உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் ஒரு விவசாயிக்கு வழங்கப்படும் அதிகபட்ச நில வரம்பு ஒரு ஏக்கர் ஆகும். சிறு,குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் ஆதார் எண், சிட்டா அடங்கல், புகைப்படம் ஆகிய விவரங்களுடன் அந்த பகுதியை சேர்ந்த உதவி வேளாண்மை அலுவலரை அணுகி உர மானியத்திற்கான பரிந்துரை விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.