கலெக்டர்களின் அனுமதியை பெற்று விவசாயிகள் ஏரி, குளங்களில் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்


கலெக்டர்களின் அனுமதியை பெற்று விவசாயிகள் ஏரி, குளங்களில் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்
x

ஏரி, குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகள் எடுத்துப் பயன்படுத்துவதற்கு வழிகாட்டி நெறிமுறைகளை அரசு பிறப்பித்துள்ளது.

சென்னை,

சட்டசபையில் 2021-2022-ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 'ஏரிகள், குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை மாவட்ட கலெக்டரின் அனுமதியை பெற்று எடுத்துக்கொள்ள தொழில்துறை, நீர்வள ஆதாரத்துறையின் ஒத்துழைப்புடன் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இப்பணியின் மூலம், விவசாய நிலங்களின் வளம் கூடி மகசூல் அதிகரிப்பதுடன், ஏரிகள், குளங்களின் நீர் சேமிக்கும் திறனும் அதிகரிக்கும்' என்று அறிவிப்பு வெளியிட்டார்.

விவசாயிகளின் நிலங்கள் மேம்பாடு

இந்த அறிவிப்பை செயல்படுத்தும்விதமாக தொழில்துறையால் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்ட ஏரி, குளங்களில் (சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர) இருந்து விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்து பயன்படுத்தும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

அதன்படி, நஞ்சை நிலங்களின் மேம்பாட்டுக்காக எக்டேர் ஒன்றுக்கு 185 கனமீட்டர் வண்டல் மண்ணும், புஞ்சை நிலங்களின் மேம்பாட்டுக்காக எக்டேர் ஒன்றுக்கு 222 கனமீட்டர் வண்டல் மண்ணும், ஏரி, குளங்களில் இருந்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை விவசாயிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரின் அனுமதியை பெற்று இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.


Next Story