வேளாண் எந்திரங்களை குறைந்த வாடகைக்கு விவசாயிகள் பெறலாம்


வேளாண் எந்திரங்களை குறைந்த வாடகைக்கு விவசாயிகள் பெறலாம்
x

வேளாண் எந்திரங்களை குறைந்த வாடகைக்கு விவசாயிகள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

வீட்டில் இருந்தபடியே முன்பதிவு

தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தி வருகிறது. தற்போதுள்ள வேலை ஆட்கள் பற்றாக்குறையை சமாளித்து, விவசாய பணிகளை குறித்த காலத்தே செய்து முடிப்பதற்காக குறைந்த வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே முன்பதிவு செய்ய உழவன் செயலி இ-வாடகையை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன் மூலம் விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகைக்கு விடப்படும் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை வீட்டில் இருந்தே உழவன் செயலி இ-வாடகை மூலம் முன் பணம் செலுத்தி வாடகைக்கு முன்பதிவு செய்யலாம். இதில் டிராக்டர், மினி டிராக்டர் எந்திரத்திற்கு குறைந்தது 2 மணி நேரமும், அதிக பட்சமாக 20 மணி நேரமும், நெல் அறுவடை எந்திரத்திற்கு குறைந்தது 1 மணி நேரமும், அதிக பட்சமாக 20 மணி நேரமும் முன் பணமாக செலுத்தி வாடகைக்கு பெறலாம். பணத்தை யு.பி.ஐ., நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு மூலம் செலுத்தி ஒப்புகை சீட்டையும், முன் பதிவு செய்த வேளாண் எந்திரங்கள் விவரத்தையும் அறியலாம்.

வேளாண் உபகரணங்கள்

விவசாயிகள் எந்திர வாடகையினை குறைந்தது 36 மணி நேரத்திற்கு முன்னதாகவும் அதிகபட்சமாக 15 நாட்களுக்குள்ளும் முன் பதிவு செய்ய வேண்டும். விவசாயிகள் தாங்கள் முன் பணமாக செலுத்திய வாடகையினை ரத்து செய்ய விரும்பினால் முன் பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்து கொள்ள வேண்டும். மேலும் பயன்படுத்தப்படாத வாடகை தொகையை பெற்றிட சம்பந்தப்பட்ட உபகோட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் பணிகளுக்கு மிகுந்த பயன் தரக்கூடிய 18 டிராக்டர்கள், 2 டிராக் வகை நெல் அறுவடை எந்திரங்கள், சக்கர வகை நெல் அறுவடை எந்திரம் ஒன்று ஆகியவை வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. டிராக்டரால் இயக்கக்கூடிய வைக்கோல் களைத்திடும் கருவி 2-ம், டிராக்டர் டிரெய்லர் ஒன்றும், நிலக்கடலை செடி பிடுங்கும் கருவி 2-ம், கொத்து கலப்பைகள் 9-ம், 11 கொத்து கலப்பை மற்றும் பல உபகரணங்கள் வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

குறைந்த வாடகை

டிராக்டரால் இயக்கக்கூடிய அனைத்து கருவிகளுக்கும் டிராக்டருடன் 1 மணி நேரத்திற்கு குறைந்த வாடகையாக ரூ.500-ம், சக்கர வகை நெல் அறுவடை எந்திரத்திற்கு 1 மணி நேரத்திற்கு ரூ.1,160-ம், டிராக் வகை நெல் அறுவடை எந்திரத்திற்கு 1 மணி நேரத்திற்கு ரூ.1,880-ம் குறைந்த வாடகை அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இத்திட்டம் தொடர்பான முழு விவரங்களை பெற்றிட ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம், செந்துறை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் உடையார்பாளையம்-பரணம் ரோடு வெள்ளைப்பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும், அரியலூர், திருமானூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அரியலூர்-ஜெயங்கொண்டம் மெயின் ரோடு பல்துறை வளாகத்தில் அறை எண் 26-ல் உள்ள வேளாண்மை பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும் அணுகலாம், என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story