விவசாயிகள் சம்பா பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்
வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் விவசாயிகள் சம்பா பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளுமாறு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா அறிவுறுத்தி உள்ளார்.
வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் விவசாயிகள் சம்பா பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளுமாறு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காப்பீடு
தற்போது சம்பா நெற்பயிர் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வரும் வேளையில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் பயிர்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் சம்பா பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக காப்பீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் நெல், ராகி பயிர் சாகுபடி பணிகள் முழு வீச்சில் நடபெற்று வருகிறது. சம்பா நெல் பயிருக்கு நவம்பர் மாதம் 15-ந் தேதி வரையும், ராகி பயிர்களுக்கு வருகிற ஜனவவி மாதம் 17-ந் தேதி வரையும், குளிர்கால நெற் பயிர்களுக்கு (ராபி) 31.1.2023 வரை காப்பீடு செய்யலாம். காப்பீட்டுக் கட்டணமாக நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.494.09, ராகி பயிருக்கு ரூ172.43 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
காத்திருக்காமல்
எனவே, நெல், ராகி பயிர்களை சாகுபடி மேற்கொள்ளும், கடன் பெறும் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், கடன் பெறா விவசாயிகள் பொதுசேவை மையங்களிலும் காப்பீடு செய்யலாம்.
முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ-அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்களது பயிரை காப்பீடு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியை (www.pmfby.gov.in) அணுகவும். மேலும், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை அலுவலர், உதவி வேளாண் அலுவலர், வங்கிகளை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.