சூரிய சக்தி பம்பு செட்டுகளை விவசாயிகள் மானியத்தில் பெறலாம்


சூரிய சக்தி பம்பு செட்டுகளை விவசாயிகள் மானியத்தில் பெறலாம்
x

விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் சூரிய சக்தி பம்பு செட்டுகளை விவசாயிகள் மானியத்தில் பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சூரிய சக்தி பம்பு செட்டுகள்

தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் முதல்-அமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 10 குதிரைத்திறன் வரையிலான மின்கட்டமைப்புடன் சாராத தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் 70 சதவீதம் மானியத்தில் அமைக்கும் திட்டம் (40 சதவீதம் தமிழக அரசின் மானியம், 30 சதவீதம் மத்திய அரசின் மானியம்) 2021-2022-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் முதல் தவணையாக சூரிய சக்தியால் இயங்கும் 2 ஆயிரம் பம்பு செட்டுகள் ரூ.43.556 கோடி மானியத்தில் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிதாக ஏற்படுத்தப்படும் பாசனத்திற்கான கிணறுகள் நிலநீர் பாதுகாப்பான குறுவட்ட பகுதிகளில் இருத்தல் வேண்டும். இதர பகுதிகளில் ஏற்கனவே உள்ள பாசன ஆதாரத்தில் டீசல் என்ஜின் பயன்படுத்தி வரும்பட்சத்தில் அதற்கு மாற்றாக இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைத்துக்கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தி பம்பு செட்டுகளை அமைக்க விரும்பும் விவசாயிகள், இலவச மின் இணைப்பு கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

மானியத்தில் பெறலாம்

மேலும் பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் பொருட்டு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைத்திட வேளாண்மை பொறியியல் துறை உபகோட்டங்களில் விண்ணப்பம் அளிக்கும்போது சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை நுண்ணீர் பாசன அமைப்புடன் இணைத்திட உறுதிமொழி அளித்திட வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவை சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. மானிய விலையில் தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்கள் அருகிலுள்ள உபகோட்ட உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அல்லது மாவட்ட அளவில் செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு pmkusum.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து அறிந்துகொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story