வேளாண் அடுக்கு திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் பதிவு செய்யலாம்


வேளாண் அடுக்கு திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் பதிவு செய்யலாம்
x
தினத்தந்தி 9 April 2023 12:30 AM IST (Updated: 9 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் அடுக்கு திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் பதிவு செய்யலாம் என நீடாமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் கூறி உள்ளார்.

திருவாரூர்

வேளாண் அடுக்கு திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் பதிவு செய்யலாம் என நீடாமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் கூறி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

வேளாண் அடுக்கு திட்டம்

தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண்மை துறையில் வேளாண் அடுக்கு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் விவசாயிகள் இணைய தங்கள் கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும். ஆதார் எண், புகைப்படம், வங்கி கணக்கு எண் விவரம், மற்றும் நில உரிமை ஆவண விவரங்களை கிரைன்ஸ் (GRAINS) என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வலைத்தளத்தில் பதிவு செய்யலாம்

பதிவேற்றம் செய்யப்படும் விவசாயிகளின் விவரங்கள் உழவர் நலத்துறை, பேரிடர் மேலாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, பட்டு வளர்ச்சி துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், விதை சான்றளிப்புத் துறை, வருவாய்த்துறை திட்டங்களில் பயன் அடைய பயன்படுத்தப்படும்.

மேலும் கிரைன்ஸ் வலைத்தளத்தின் மூலம் அரசின் நன்மைகள் சரியான பயனாளிக்கு சென்று அடைவதை உறுதிப்படுத்த முடியும். இது ஒற்றை சாளர வலைத்தளமாக பயன்படுவதால் விவசாயிகள் அனைத்து துறை சார்ந்த திட்டங்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

தனித்தனியாக...

ஒவ்வொரு முறையும் அரசின் திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கும் போது தனித்தனியாக ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை. விவசாயிகள் இதுவரை அரசிடம் இருந்து பெற்ற நன்மைகளை முழுமையாக இந்த வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் விவரங்கள் மற்றும் பயிர் விவரங்களை கொண்டு அதற்கேற்ற பயன்களை அளிக்க முடியும். மேலும் நிதி திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் நேரடி பண பரிமாற்றம் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக அனுப்பப்படும்.

ஆவணங்கள்

நீடாமங்கலம் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலகம், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகங்களுக்கு ஆதார் எண், புகைப்படம், ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண், நில உரிமை ஆவணங்களுடன் சென்று கிரைன்ஸ் வலைத்தளம் மூலம் பதிவு செய்து பயன் அடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story