மாயனூர் பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க விவசாயிகள் கோரிக்கை
கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாயனூர் பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தென்னிலை பகுதியில் ஆட்டுக்குட்டிகள் விற்பனைக்கு ஏற்றவாறு விற்பனை மையம் ஏற்படுத்தி தரவேண்டும். கரூர் பகுதியில் சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். செக்கணம் பகுதியில் நிலப் பிரச்சினைகள் தொடர்பாகவும், கோனகுத்தி பகுதியில் கிராமப் பகுதியில் பொதுமக்களுக்கு தினசரி வழங்கும் குடிநீர் முறையாக வழங்கப்பட வேண்டும்.
மூர்த்திபாளையம் கிராம பகுதியில் வேளாண்மை கூட்டுறவு வங்கி கடன் பத்திரம் வழங்க வேண்டும். குன்னிகாட்டூர் கிராமத்தில் விவசாய நிலங்கள் பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வார வேண்டும். வேலாயுதம்பாளையம் பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து தர வேண்டும். சங்கரன்மலைப்பட்டி கிராமப்புற மக்களுக்கு விவசாயப் பகுதிகளில் கிணறு அமைத்து தர வேண்டும்.
சாலை பராமரிப்பு பணி
கருங்காலப்பள்ளி கிராம பகுதி மக்களுக்கு சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். மாயனூர் பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும் சாக்கடை கால்வாயை சீரமைப்பது தர வேண்டும். பஞ்சப்பட்டி ஏரி குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவது குறித்தும் கோரிக்கை விடுத்தனர். மேலும் உள் வீரராக்கியம் பகுதியில் மழைநீர் வழித்தடம் மற்றும் இணைப்பு பாலம் அமைத்து தருவது. பணிக்கம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிக்கு இலவச மின் இணைப்பு ஏற்படுத்தி தருவது.
மருங்காப்பூர் பகுதியில் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது. மகிளிப்பட்டி பகுதியில் புதிய பாலம் கட்டியதற்கு பின் கரூர் முதல் மணப்பாறை வரை போக்குவரத்து இயக்குவது. தான்தோன்றி மலைப் பகுதியில் சாலை பராமரிப்பு பணிகளை சீரமைத்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் 107 கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.
அரசு நலத்திட்ட உதவி
பின்னர் வேளாண்மை உழவர் நலத்துறையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.647 மதிப்பீட்டில் தார்பாலினும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 2 பயனாளிக்கு தலா ரூ.85 ஆயிரம் மதிப்பீல் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் பவர் டில்லர் எந்திரமும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.10,800 மதிப்பீட்டில், மா பரப்பு விரிவாக்கமும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு தனிப்பட்டாவும் என மொத்தம் 5 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 447 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.