ஒரு கிலோ முட்டைகோசை 1 ரூபாய்க்கு கேட்பதால் டிராக்டர் ஓட்டி அழிக்கும் விவசாயிகள்


ஒரு கிலோ முட்டைகோசை 1 ரூபாய்க்கு கேட்பதால் டிராக்டர் ஓட்டி அழிக்கும் விவசாயிகள்
x

தாளவாடி மலைப்பகுதியில் ஒரு கிலோ முட்டைகோசை 1 ரூபாய்க்கு கேட்பதால் வேதனை அடைந்த விவசாயிகள் தோட்டத்திலேயே டிராக்டர் ஓட்டி பயிரை அழிக்கின்றனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள தாளவாடி மலைப்பகுதியில் கொங்கள்ளி, பனகஹள்ளி போன்ற 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு பெரும்பாலானவர்கள் விவசாயிகள். கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைக்கோஸ், காலிபிளவர், பீன்ஸ் ஆகிய பயிர்களை வழக்கமாக சாகுபடி செய்வார்கள். .

தாளவாடி மலை கிராமங்களில் தற்போது சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 3 மாத பயிரான முட்டைகோஸ் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.

1 ரூபாய்க்கு கேட்கிறார்கள்...

இந்தநிலையில் தோட்டத்துக்கு வந்து மொத்தமாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ஒரு கிலோ முட்டைகோசை 1 ரூபாய்க்கு கேட்கிறார்கள்.

இதனால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த விவசாயிகள் பலர் விற்க மனமின்றி டிராக்டரில் உழவு எந்திரத்தை பொருத்தி நன்றாக வளர்ந்துள்ள முட்டைகோஸ்களை செடியோடு அழிக்கின்றனர்.

ரூ.4 லட்சம் நஷ்டம்

இதுகுறித்து விவசாயி குணசேகரன் கூறும்போது, 'ஒரு ஏக்கர் முட்டைகோஸ் சாகுபடி செய்ய நாற்று நடுதல், களை எடுத்தல், உரம் வைப்பது, பூச்சிகொல்லி மருந்து தெளிப்பது என ரூ.80 ஆயிரம் செலவாகும். ஆனால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் இருந்து வரும் விவசாயிகள் ஒரு கிலோ முட்டைகோசை 1 ரூபாய்க்கு கேட்கின்றனர். காய்கறி கடைகளில் கிலோ 30 ரூபாய்க்கு விற்கிறார்கள். நாங்கள் எப்படி 1 ரூபாய்க்கு கொடுப்பது?

மனசாட்சி இல்லாமல் 1 ரூபாய்க்கு விலை கேட்கிறார்களே என்று நானே 5 ஏக்கரில் பயிரிட்டு இருந்த முட்டைகோஸ்களை டிராக்டர் ஓட்டி அழித்தேன். இதனால் எனக்கு ரூ.4 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அரசே கொள்முதல் செய்யவேண்டும்

நான் மட்டுமல்ல முட்டைக்கோஸ் பயிரிட்ட ஏராளமான விவசாயிகள் வேதனையோடு அழித்துவிட்டனர். தோட்டத்தில் பயிரை அழித்த பின்னர் நிலத்தை அப்படியே போட்டு விட முடியாது. மீண்டும் கடன் வாங்கி ஏதாவது ஒரு காய்கறியை பயிரிடுவோம். வியாபாரிகள் 5 மடங்கு லாபம் பார்க்கிறார்கள். எனவே வேளாண்மை துறை மூலம் மலைப்பகுதியில் விளையும் காய்கறிகளை அரசே முறையான விலைக்கு கொள்முதல் செய்து அதை உழவர் சந்தைகளில் விற்கவேண்டும். அப்போதுதான் மலைப்பகுதி விவசாயிகளின் கவலை தீரும்' என்றார்.


Next Story