விருத்தாசலத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம்
கரும்புக்கான நிலுவைத்தொகையை வழங்காத தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து விருத்தாசலத்தில் விவசாயிகள் தர்ணா பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்காமல் ஏமாற்றி வரும் சித்தூர் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் பேரணியாக சென்று சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக விருத்தாசலம் பாலக்கரையில் நேற்று ஒன்று திரண்டனர்.
அப்போது அங்கிருந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித்ஜெயின் தலைமையிலான போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேரணி மற்றும் முற்றுகை போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. எனவே அனைவரும் கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். இருப்பினும் அதனை மீறி கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு சங்க செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். ராஜேந்திரன், குணவேல், செல்வராசு, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொது செயலாளர் ரவீந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மாநில துணைத்தலைவர் ரவிச்சந்திரன், மாநில செயலாளர் காசிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தங்க. தனவேல், ஜனநாயக கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் ராமர், தலைவர் கந்தசாமி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
கோரிக்கை மனு
அப்போது விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும், கரும்பு விவசாயிகள் பெயரில் ரூ.300 கோடி அளவிற்கு தேசிய வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிய தனியார் சர்க்கரை ஆலை உரிமையாளரை கண்டித்தும், அவரை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து விவசாயிகள் பேரணியாக சென்று விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட புறப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து விவசாயிகள் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்த சப்-கலெக்டர் பழனியை சந்தித்து தங்களது கோரிக்கை குறித்த மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனை அடுத்து விவசாயிகள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.