அறுவடை முடிந்த வயல்களில் ஆட்டுகிடைகள் அமைக்கும் விவசாயிகள்
தஞ்சையில் அறுவடை முடிந்த வயல்களில் மண்வளத்தை மேம்படுத்த விவசாயிகள் ஆட்டு கிடைகள் அமைத்து வருகின்றனர்
தஞ்சையில் அறுவடை முடிந்த வயல்களில் மண்வளத்தை மேம்படுத்த விவசாயிகள் ஆட்டு கிடைகள் அமைத்து வருகின்றனர்.
ஆட்டு கிடை
தஞ்சை மாவட்டத்தில் வயல்களை இயற்கை உர வளத்துடன் மண் வளத்தை மேம்படுத்துவதற்காக ஆட்டு கிடை போடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. பொதுவாக காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, குறுவை, தாளடி சாகுபடி நடைபெறும். நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் அறுவடை முடிந்த பின்னர் விவசாயிகள் வயல்களை காற்றாடப்போட்டு வைக்கின்றனர்.
தற்போது தஞ்சை பகுதியில் உள்ள பெரும்பாலான வயல்களில் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன. இதன்காரணமாக விவசாயிகள் வயல்களில் ஆட்டு கிடைகள் போட்டு மண்வளத்தை மேம்படுத்துகின்றனர்.
மண்வளம் அதிகரிக்கும்
தஞ்சை பகுதியில் ஆட்டுகிடை போடுவதற்காக ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து ஆடு மேய்ப்பவர்கள் ஆட்டு மந்தைகளை லாரிகளில் ஏற்றிக்கொண்டு காவிரி பாசன பகுதிக்கு அதிகளவில் வருகின்றனர்.
ஆடுகளை வயல்களில் கிடை போடும் போது அவற்றின் சிறுநீர், புழுக்கைகள் வயலுக்கு இயற்கை உரமாக கிடைக்கிறது. இதன் காரணமாக மண்ணின் நீர்பிடிப்புதிறன், காற்றோட்டம், மண்ணின் அடர்வு, மண்ணின் தன்மை, மண்ணின் வளம் அதிகரிக்கிறது.இதன் பலன் சாகுபடியின் போது கண்கூடாக தெரிவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பா சாகுபடி
இந்த நிலையில் சம்பா சாகுபடியை முன்னிட்டு திருவாரூரில் இருந்து தஞ்சை சமுத்திரம் ஏரி அருகே ஆட்டுகிடை போட வந்துள்ள தொழிலாளி கூறுகையில்:- அறுவடை காலம் தொடங்கியவுடன் நாங்கள் ஆடுகளை கிடை போடுவதற்காக தஞ்சை பகுதிக்கு வந்து விடுவோம். ஆடு கிடை போடும் வயல்களிலே தங்கிவிடுவோம். கிடை போடுவதற்கு பெரும்பாலும் செம்மறி ஆடுகளையே பயன்படுத்துவோம்.
வயல்களில் நல்ல விளைச்சல் ஏற்படுவதால் ஆட்டுகிடை போட விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. மேலும், ஒரு நாள் கிடை போடுவதற்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரை கூலியாக பெறுகிறோம். ஆடுகளின் எண்ணிக்கையை பொறுத்து கூலி நிர்ணயம் செய்யப்படுகிறது. நாங்கள் 700-க்கும் மேற்பட்ட ஆடுகளை கிடை போடுவதற்காக கொண்டு வந்துள்ளோம். ஆட்டுகிடை போட்டதற்கான கூலியை சிலர் அவ்வப்போது கொடுப்பார்கள், சிலர் சாகுபடி முடிந்த பின்னர் கொடுப்பார்கள். வருடந்தோறும் கிடை போட வருவதால் எங்களுக்கு வாழ்வாதார பெருக்கத்தை மட்டுமின்றி, மனநிறைவையும் ஆட்டுகிடை போடும்தொழில் தருவதாக கூறினார்.