விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து வேளாண்துறை அலுவலர்கள் விளக்கி கூறினர். விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அலுவலர்கள் தெரிவித்தனர். வரத்து கால்வாய் சீரமைத்தல், மின்சார வயர்கள் வயல்வெளிகளில் தாழ்வாக செல்வதை சரி செய்ய வலியுறுத்துதல், பஸ் வசதி, நகை கடன் தள்ளுபடி, கண்மாய் மற்றும் ஊருணிகளை தூர்வாருதல் போன்ற கோரிக்கைகளை கலெக்டரிடம் விவசாயிகள் தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்து கலெக்டர் கூறியதாவது:- விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகள் மீது உரிய தீர்வு காணப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2022-23-ம் ஆண்டிற்கான வறட்சி நிவாரணமாக பாதிக்கப்பட்ட 98,354 எக்டருக்கு ரூ.132.7 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பகுதி வாரியாக வங்கி கணக்குகள் சரி பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனுஷ்கோடி, பயிற்சி உதவி கலெக்டர் சிவானந்தம் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.