விவசாயிகள் குறைதீ்ர்க்கும் கூட்டம்
நெல் விளைச்சல் அதிகமாக இருப்பதால் சேமிப்பு கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
ராயமுண்டான்பட்டி வெ.ஜீவகுமார்:- நடப்பு ஆண்டு நெல் விளைச்சல் அதிகமாக இருக்கிறது. சேமிப்பு கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும். இடப்பற்றாக்குறை வந்தால் மன்னர் காலத்தில் கோவில்களில் சேமித்து வைத்ததை போல் தேவைப்பட்டால் இப்போதும் கோவில்களில் நெல் மூட்டைகளை சேமித்து வைக்கலாம். நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பிரீமியம் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
சிறப்புக்குழு ஆய்வு
திருவோணம் வி.கே.சின்னதுரை:- நடப்பு ஆண்டு டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணிக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பல இடங்களில் சரியாக தூர் வாரப்படாமல் முறைகேடு நடந்துள்ளது. எனவே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புக்குழு ஆய்வு செய்ய வேண்டும். தட்டுப்பாடு இன்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அய்யம்பேட்டை முகமது இப்ராஹிம்:- பாபநாசம் பகுதியில் நவீன அரிசி ஆலையை தொடங்க வேண்டும். மாவட்டத்தில் உர தட்டுப்பாடு நிலவுவதை கவனத்தில் கொண்டு அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முரண்பாடு
பொன்னவராயன்கோட்டை வீரசேனன்:- பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் சம்பாவுக்கு பிரிமீயம் செலுத்த 2 இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால், பிரிமீய தொகை வித்தியாசமாகவும், இழப்பீடு ஏற்ற, இறக்கத்துடனும் இருக்குமா? என்ற சந்தேகம் இருக்கிறது. இந்த முரண்பாட்டை தவிர்க்க ஒரே நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்:- தமிழக அரசு கடந்த நிதிநிலை அறிக்கையில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.195 அறிவித்ததை உடனடியாக வழங்க வேண்டும்.
இதேபோல் பயிர்க்கடன்களை இணையதள பதிவு வசதியுடன் வழங்க வேண்டும். கடலில் வீணாக கலக்கும் உபரி நீரை வறண்டு கிடக்கும் ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும். மழைக்காலம் என்பதால், தஞ்சை மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு பனை விதைகளை சாலையோரங்களிலும், ஆறு, குளக்கரைகளிலும் நட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.