பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
மேட்டூர் அணையில் இருந்து திருச்சி, கரூர் மாவட்ட பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
மேட்டூர் அணையில் இருந்து திருச்சி, கரூர் மாவட்ட பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி முன்னிலை வகித்தார். வேளாண் அதிகாரிகள், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு பேசும்போது, பொங்கல் பண்டிகையையொட்டி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, செங்கரும்புகள் கொள்முதல் செய்து ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கரும்பு விவசாயிகளின் சார்பில் அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வெள்ளநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க மேட்டூரில் இருந்து அய்யாற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும். அதன் மூலம் 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் சாகுபடி நிலங்களாக மாறும். மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கமுடியும் என்றார்.
பாசன வாய்க்கால்களில்
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் பேசுகையில், மேட்டூர் அணையில் 120 அடிக்கு குறையாமல் தண்ணீர் உள்ளது. எனவே உய்யகொண்டான், கட்டளை மேட்டு கால்வாய் மற்றும் திருச்சி, கரூர் மாவட்ட பாசன வாய்க்கால்களில் குடிநீர் தேவை மற்றும் பாசனத்துக்கு மே மாதம் வரை தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றார். பாரதிய கிசான் சங்க மாநில செயலாளர் வீரசேகரன் பேசும்போது, இ நாம் என்ற திட்டம் மூலம் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை இணைய வழியில் விற்று வருகின்றனர். இந்த திட்டத்தை தடை செய்ய வேண்டும் என வர்த்தக சங்கத்தினர் முயற்சிப்பதாக தெரிகிறது. எனவே இந்த திட்டம் தொடர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மாநில அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றார்.