வயல்களில் ஆடு, மாடுகளை 'கிடை' போடுவதற்கு ஆர்வம் அதிகரிப்பு
இயற்கை உரத்துக்கு மாறி வரும் விவசாயிகள் வயல்களில் ஆடு, மாடுகளை கிடை போடுவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இயற்கை உரத்துக்கு மாறி வரும் விவசாயிகள் வயல்களில் ஆடு, மாடுகளை கிடை போடுவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
ரசாயன உரங்களால் பாதிப்பு
முந்தைய காலங்களில் விவசாயிகள் கால்நடைகளின் கழிவுகளை இயற்கை உரமாக வயல்களுக்கு இட்டு விவசாயம் செய்து வந்தனர். அதற்காகவே விவசாயிகள் அதிகளவில் வீடுகளில் கால்நடைகளை வளர்த்து வந்தனர். சமீபகாலமாக கிராமங்களில் கால்நடைகள் வளர்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதால் கால்நடை கழிவுகள் அதிகளவில் கிடைப்பதில்லை
அதனால் இயற்கை உரத்திற்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டதால் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து வந்தது. ரசாயன உரங்களால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு அதில் விளைவிக்ககூடிய தானியங்களை உண்ணும் மனித இனம் மட்டுமின்றி கால்நடைகள் உள்பட அனைத்து உயிரினங்களும் பல்வேறு நோய் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. இந்த நிலையில் இயற்கை உரத்தை பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவு தானியங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. எனவே விவசாயிகள் இயற்கை உரத்துக்கு மாறி வருகின்றனர்.
திருக்கருகாவூர்
வயல்களில் ஆடுகள், மாடுகள் உள்ள கால்நடைகளை அடைத்து வைப்பதன் மூலம் கால்நடைகளின் சாணம் இயற்கை உரமாக கிடைக்கிறது. இதற்காக அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாடுகள் தஞ்சை மாவட்டத்துக்கு கொண்டு வரப்படுகிறது. பாபநாசம், திருக்கருகாவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் இயற்கை உரத்துக்காக தங்கள் வயல்களில் ஆடு, மாடுகளை கிடை போட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள் தஞ்சை உள்பட டெல்டா மாவட்டங்களுக்கு மேய்ச்சலுக்காகவும், இயற்கை உரத்துக்காக கொண்டு வரப்படுகின்றன.
வயலில் கிடை
இதுகுறித்து மாடுமேய்ச்சலில் ஈடுபட்டுள்ள அரியலூர் மாவட்டம், ஏலாகுறிச்சி பகுதியை கூலி தொழிலாளர் ஒருவர் கூறியதாவது, 'தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் சம்பா அறுவடை முடிந்தவுடன் எங்கள் ஊர் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து மாடுகளை சேகரித்து மேய்ச்சலுக்காக கொண்டு வருவோம். 5 மாதம் வரை இங்கேயே தங்கியிருந்து மேய்ச்சலில் ஈடுபடுத்துவோம். பகலில் மாடுகளை மேய்ப்போம். இரவு விவசாய வயல்களில் மாடுகள் தங்க கிடை வைப்போம். ஒரு இரவுக்கு கிடை வைக்க ரூ.2 ஆயிரம், 3 படி அரிசியை கூலியாக பெறுவோம். ஆடுகளுக்கு ஒரு நாள் இரவு கிடை வைக்க ரூ.400 முதல் ரூ.600 வரை வாங்குவோம்
ஆண்டுதோறும்...
மேட்டூர் அணை திறக்கப்பட்டு வாய்க்கால்களில் தண்ணீர் வந்து, வயல்களில் நடவு நட்டு முடியும் வரையிலும் இங்கேயே தங்கி இருந்து கிடை வைப்போம். பிறகு சொந்த ஊருக்கு மாடுகளை ஓட்டி சென்று மாடுகளை உரியவர்களிடம் ஒப்படைத்து விடுவோம். ஆண்டுதோறும் இதுபோல மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு வருவோம்' என்றார்.
இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு அரசு பல்வேறு சலுகைகளை அளிப்பதன் மூலம் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து சத்து நிறைந்த உணவு தானியங்களை உற்பத்தி செய்ய முடிவும் என விவசாயிகள் கூறுகிறார்கள்.