இயற்கை உரத்துக்காக வயல்களில் 'ஆட்டுக்கிடை' போடும் விவசாயிகள்
சேதுபாவாசத்திரம் அருகே இயற்கை உரத்துக்காக வயல்களில் விவசாயிகள் ஆட்டுக்கிடை போட்டு வருகிறார்கள். இதன் மூலம் மண் வளம் அதிகரிப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.
சேதுபாவாசத்திரம் அருகே இயற்கை உரத்துக்காக வயல்களில் விவசாயிகள் ஆட்டுக்கிடை போட்டு வருகிறார்கள். இதன் மூலம் மண் வளம் அதிகரிப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.
நெற்களஞ்சியம்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை) திகழ்கிறது. காவிரி ஆறு கரை புரண்டோடும் இந்த டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல வாழை, கரும்பு, தென்னை, உளுந்து மற்றும் பயறு வகை பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. ஆங்காங்கே காய்கறி, பூ வகை பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என ஆண்டுக்கு 3 போகம் நெல் விளைவிக்கப்படுகிறது. நெல் சாகுபடி முடிந்த பிறகு ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை 3 மாதங்களுக்கு வயலில் எந்த சாகுபடியும் செய்யாமல் அப்படியே விட்டு விடுவர். இந்த மாதங்கள் கோடை காலமாகவும் இருப்பதால் பெரும்பாலும் ஆற்றில் தண்ணீர் வரத்து இருப்பது இல்லை. ஆழ்துளை கிணறு வசதி கொண்ட பகுதிகளில் கோடையிலும் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.
இயற்கை உரம்
சாகுபடி பணிகள் நடைபெறாத காலகட்டத்தில் வயல்களில் புற்கள் முளைத்து வளரும். அப்போது வயல்களில் ஆடுகளை விவசாயிகள் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இதற்காக ஆடுகள் இரவு நேரங்களில் ஏதாவது ஒரு வயலில் தங்க வைக்கப்படுகிறது.
இதற்கு ஆட்டுக் கிடை போடுவது என்று பெயர். இவ்வாறு கிடை போடும்போது வயலுக்கு இயற்கை உரம் கிடைக்கிறது. இதன் மூலம் மண் வளமும் பெருகுவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள். ஆட்டுக்கிடை போடுவதற்கு விவசாயிகளின் ஆதரவும் அதிகம் இருக்கிறது. இப்படி ஆட்டுக்கிடை போடுபவர்கள் இரவு நேரத்தில் வயல்களில் பட்டி போடுகிறார்கள். ஆடுகள் வெளியே செல்லாத வகையில் வட்டமாக வலை விரித்து, அதனுள்ளே ஆடுகளை அடைத்து விடுகின்றனர்.
ஆட்டுக்கிடை
இப்படி ஆடுகளை பட்டியில் அடைப்பதால் ஆடுகளின் சிறுநீரும், புழுக்கைகளும் வயலுக்கு இயற்கை உரமாக கிடைக்கும். கிடை போடுவதற்காக காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வருபவர்கள் விவசாயப் பணிகள் தொடங்கும் வரை இங்கேயே தங்கி விடுகின்றனர்.
இப்போது தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே விளங்குளம் பகுதியில் சாகுபடி பணிகள் முடிந்து விட்ட வயல்களில் ஆட்டுக்கிடை போடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட செம்மறி ஆடுகள் அங்கு பட்டி அமைத்து வயல்களில் மேய்ச்சலுக்கு விடப்பட்டு வருகிறது.
கூடுதல் லாபம்
ஆடுகளை கிடை போடுவதால் வயலுக்கு தேவையான இயற்கை உரம் கிடைப்பது கூடுதல் லாபமாக பார்க்கப்படுகிறது. அடுத்த சாகுபடியின் போது இயற்கை உரத்துக்கான பலன் அதிகளவில் கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.இவ்வாறு பட்டி போடுபவர்களுக்கு ஆடுகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் ஒரு இரவுக்கு ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை கூலியாக வழங்கப்படுகிறது. பகலில் வயலில் மேய்ச்சலுக்கு ஆடுகளை விடுவதால் அவற்றின் தீவன செலவும் மிச்சம். இரவில் வயலில் தங்க வைக்கப்படுவதால் வருமானமும் உண்டு என்பதால் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆடு வளர்ப்பு விவசாயிகள் தற்போது கிடை போடுவதில் மும்முரம் காட்டி வருகிறார்கள்.