இயற்கை உரத்திற்காக வயல்களில் ஆட்டுக்கிடை போடும் விவசாயிகள்
மணல்மேடு பகுதியில் இயற்கை உரத்திற்காக வயல்களில் ஆட்டுக்கிடை போடும் விவசாயிகள்
மணல்மேடு:
மணல்மேடு பகுதியில் இயற்கை உரத்திற்காக வயல்களில் விவசாயிகள் ஆட்டுக்கிடை போட்டு வருகிறார்கள். இதனால் மண் வளம் அதிகரிப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
ரசாயன உரம்
மணல்மேடு பகுதியில் சம்பா மற்றும் தாளடி விவசாயம் முடிந்து சிலர் பருத்தி, உளுந்து, பயறு வகைகளை பயிரிட்டுள்ளனர். அனேக நிலங்கள் அறுவடைக்குப் பிறகு சாகுபடி எதுவும் இல்லாமல் அப்படியே போடப்பட்டுள்ளது. ரசாயன உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் என ரசாயன பொருட்களை நிலத்தில் போட்டு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருவதால் விவசாய நிலங்கள் மோசடைந்து வருகிறது.
ஒருசில விவசாயிகள் அதிலிருந்து விடுபடவும் நிலத்தை காப்பாற்றவும் இயற்கை உரங்களை முடிந்த அளவில் வயலுக்கு இட்டு வருகின்றனர்.ஆடு, மாடுகளின் கழிவுப்பொருட்களான சாணம் மற்றும் சிறுநீர் நிலத்திற்கு நல்ல உரமாகத் திகழ்கிறது. இதனை பெறுவதற்கு நிலத்தில் கிடை போடுவது நேரடியாகவும், உடனடியாகவும் நிலத்திற்கு உரமிடும் முறையாக கருத்தப்படுகிறது
ஆட்டுக்கிடை
சாகுபடி பணிகள் நடைபெறாத காலகட்டத்தில் வயல்களில் புற்கள் முளைத்து வளரும். அப்போது வயல்களில் ஆடுகளை விவசாயிகள் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இதற்காக ஆடுகள் இரவு நேரங்களில் ஏதாவது ஒரு வயலில் தங்க வைக்கப்படுகிறது. இதற்கு ஆட்டுக் கிடை போடுவது என்று பெயர்.தமிழ்நாட்டில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் ஆட்டு கிடைபோடும் பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆடு இலை, தழைகளை அதிகமாக உண்பதால் அதனுடைய கழிவுகள் உடனடியாக உரமாக மாற்றப்பட்டு பலனளிக்கிறது. எனவேதான் ஆட்டுக்கிடை போடும் வழக்கம் அதிகமாக உள்ளது. மேலும் ஆட்டின் சிறுநீரானது களைச் செடிகள் முளைப்பதை தடைசெய்து விடுகிறது. ஆட்டு எருவில் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான நைட்ரஜன் (தழைச்சத்து), பாஸ்பரஸ் (மணிச்சத்து), பொட்டாஷ் (சாம்பல் சத்து), சுண்ணாம்புச்சத்து, நுண்ணூட்டச்சத்து ஆகியவை உள்ளன.
மண் வளம் பாதுகாக்கப்படுகிறது
நீண்ட நாளுக்கு வேளாண்மை செய்வதற்கு ஏதுவாக மண்வளம் பாதுகாக்கப்படுகிறது. குறைந்த செலவில் பயிருக்குத் தேவையான சத்துகள் இதன் மூலம் கிடைக்கின்றது. கிடை போடுதவற்காகவே மதுரை, ராமநாதபுரம் மற்றும் திருவண்ணாமலை போன்ற பகுதிகளிலிருந்து ஆடுகளை கொண்டுவந்து பகலில் மேய்ச்சலுக்கு விடுவதும் இரவில் விவசாயிகள் கேட்கும் நிலத்தில் கிடை போதுவதும் தங்களது தொழிலாக வைத்துள்ளனர்.
மணல்மேடு பகுதியில் வில்லியநல்லூர், கிழாய், வக்காரமாரி, தலைஞாயிறு, வரதம்பட்டு, சித்தமல்லி, கடக்கம், முடிகண்டநல்லூர், திருச்சிற்றம்பலம், கிழாய், கடலங்குடி, ஆத்தூர், ஐவநல்லூர், கொற்கை, தாழஞ்சேரி போன்ற பகுதிகளில் ஆடுகள் கிடைபோடுதல் நடைபெற்றவருகிறது. ஆயிரம் ஆடுகளை ஓரு ஏக்கர் நிலத்தில் இரவு ஒன்றுக்கு கிடை கட்டுவதற்கு ரூ.1500 கட்டணமாகப் பெற்றுக் கொள்கின்றனர். ஜூன்மாதம் வரை கிடை போட்டுவிட்டு அதன்பிறகு அறுவடை எங்கு துவங்குகிறதோ அந்த மாவட்டம் மற்றும் மாநிலத்திற்கு கிடை போடுபவர்கள் தங்களது பயணத்தை தொடங்குகின்றனர்.