குளத்தூர் துணை மின் நிலையத்தை விவசாயிகள் முற்றுகை
குளத்தூர் துணை மின் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையி்ட்டனர்.
கீரனூர்:
கீரனூர் அருகே குளத்தூர் துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து வினியோகிக்கப்படும் மின்சாரம் அத்திரி வயல், உப்பிலியகுடி, வடுகப்பட்டி, ஏ.டி.கே.நகர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய மின் மோட்டார்கள் மற்றும் வீடுகளுக்கு குறைந்த மின்னழுத்த மின்சாரமாக சப்ளையாவதால் மின் மோட்டார்கள், வீட்டு உபயோக மின்சாதனங்கள் பழுதடைந்து வருகிறது. இதனால் அத்திரிவயல் கிராமத்தில் மின்மாற்றி அமைத்து அங்கிருந்து மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டுமென அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் குளத்தூர் துணை மின்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து அங்கு வந்த கீரனூர் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.