ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் உழவர் சந்தை
ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் உழவர் சந்தை அமைக்கும் பணிக்கு அமலுவிஜயன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
பேரணாம்பட்டு சுற்றுப்புற பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் வேளாண் விளை நிலங்களில் பயிரிட்டு வருகின்றனர். பேரணாம்பட்டு பகுதியில் உழவர் சந்தை ஏற்படுத்தக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உத்தரவிட்டு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் பேரணாம்பட்டு ஒன்றியத்தில் உழவர் சந்தை ஏற்படுத்த ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
வேலூர் மாவட்டத்தில் வேலூர் டோல்கேட், காகித பட்டறை, காட்பாடி, குடியாத்தம் ஆகிய 4 இடங்களில் உழவர் சந்தை இயங்கி வருகிறது பள்ளிகொண்டாவில் உழவர்சந்தை அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில் மாவட்டத்தில் 6-வது உழவர்சந்தையாக பேரணாம்பட்டில் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயனடைய உள்ளனர். பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் பங்களாமேட்டில் புதிய பஸ் நிலையம் பகுதியில் மொத்தம் 16 கடைகளுடன் உழவர்சந்தை அமைப்பதற்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. பேரணாம்பட்டு வட்டார ஆத்மா திட்ட தலைவர் பொகளூர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அமைப்பாளராக அமலு விஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேரணாம்பட்டு நகராட்சி தலைவர் பிரேமா வெற்றிவேல், துணைத்தலைவர் ஆலியார்ஜூபேர் அஹம்மத், வேளாண் விற்பனை உதவி பொறியாளர் வடிவேல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை அலுவலர் லீலாவதி, வேளாண்மை விற்பனை குழு செயலாளர் கண்ணன், குடியாத்தம் உழவர் சந்தை அலுவலர் லோக பிரியன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் டேவிட் மற்றும் ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.