ஊக்கத்தொகை பெற விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும்; கலெக்டர் விஷ்ணு அறிவுறுத்தல்


ஊக்கத்தொகை பெற விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும்; கலெக்டர் விஷ்ணு அறிவுறுத்தல்
x

பிரதம மந்திரியின் விவசாயிகள் ஊக்கத்தொகைக்கு ஆதார், செல்போன், வங்கி கணக்கு எண் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.

திருநெல்வேலி

பிரதம மந்திரியின் விவசாயிகள் ஊக்கத்தொகைக்கு ஆதார், செல்போன், வங்கி கணக்கு எண் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.

ஊக்கத்தொகை திட்டம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாய குடும்பத்துக்கு 3 தவணையாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை 11 தவணைகள் தொகை வழங்கப்பட்டு உள்ளது. அடுத்த தவணை பணம் பெறுவதற்கு தங்களது சுய விவரங்களான ஆதார் எண், வங்கி கணக்கு, செல்போன் எண் மற்றும் சிட்டா உள்ளிட்ட ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

எனவே விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயன்பெற உடனடியாக அருகில் உள்ள பொது சேவை மையத்துக்கு சென்று விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

நில ஆவணங்கள் சரிபார்ப்பு

மேலும் பதிவு செய்த தகுதியான விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களை சரிபார்ப்பு செய்து கொள்வதும் அவசியம் ஆகும். இந்த திட்டத்தின் பயனாளிகளின் நில ஆவணங்களை தமிழ் நிலம் இணையதளத்துடன் இணைத்து சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. அனைத்து வட்டாரங்களிலும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளின் விவரம் அவர்களது நில ஆவணங்களுடன் சரிபார்ப்பு செய்யப்பட்டு வருகிறது.

எனவே தகுதியான விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களுடன் அந்தந்த வட்டார வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு தங்களது நில ஆவணங்களை சமர்ப்பித்து, PM KISAN இணையதளத்தில் நில விவரங்களை இணைத்துக்கொண்டு இந்த திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story