தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள்இயற்கை வேளாண் பொருட்களுக்குதரச்சான்றிதழ் பெறலாம்


தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள்இயற்கை வேளாண் பொருட்களுக்குதரச்சான்றிதழ் பெறலாம்
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை வேளாண் விளை பொருட்களுக்கு தரச்சான்று பெறலாம் என்று தூத்துக்குடி விதைச்சான்று மற்றும் அங்ககசான்று உதவி இயக்குனர் சுரேஷ் கூறி உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை வேளாண் விளை பொருட்களுக்கு தரச்சான்று பெறலாம் என்று தூத்துக்குடி விதைச்சான்று மற்றும் அங்ககசான்று உதவி இயக்குனர் சுரேஷ் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இயற்கை விளைபொருட்கள்

இயற்கை விளை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட வேளாண் விளைபொருட்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் அங்கக விளை பொருட்களுக்கான அங்காடிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் அதற்கான தரச்சான்று என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. எனவே இயற்கை முறையில் ரசாயனங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் இன்றி விளைவிக்கப்படும் விளைபொருட்களுக்கு தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையால் குறைந்த கட்டணத்தில் தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.

தரச்சான்று

இயற்கை முறையில் வேளாண்மை செய்பவர்களுக்கும், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட விளைபொருட்களுக்கும் தமிழக அரசின் விதைச்சான்று மற்றும் அங்கக சான்று துறையால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.

தற்போது இயற்கை முறையில் வேளாண் விளைபொருட்களை உற்பத்தி செய்து வரும் விவசாயிகள் அல்லது உற்பத்தி செய்ய விரும்பும் விவசாயிகள் தனியாகவோ அல்லது ஒரு குழுவாகவோ தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையில் உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து மேலும் விவரங்களை அறிந்து கொள்ள தூத்துக்குடி புதிய பஸ்நிலையம் அருகில் எட்டயபுரம் ரோட்டில் உள்ள உழவர் மையத்தில் இயங்கி வரும் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் இதுகுறித்த விவரங்களை https://www.tnocd.net/ என்ற இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story