வடக்கு விஜயநாராயணம் பெரிய குளத்துக்கு தண்ணீர் கேட்டு விவசாயிகள் உண்ணாவிரதம்
வடக்கு விஜயநாராயணம் பெரிய குளத்துக்கு தண்ணீர் கேட்டு விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இட்டமொழி:
வடக்கு விஜயநாராயணம் பெரிய குளத்துக்கு தண்ணீர் கேட்டு விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
கருகும் பயிர்களைக் காப்பாற்ற வடக்கு விஜயநாராயணம் பெரியகுளத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும். மணிமுத்தாறு அணையில் இருந்து 3, 4-வது ரீச்களில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தி, வடக்கு விஜயநாராயணம் வருவாய் அலுவலர் அலுவலகம் அருகில் விவசாய சங்கத்தினர் நேற்று காலையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
வடக்கு விஜயநாராயணம் விவசாய சங்க நிர்வாகி முருகன் தலைமை தாங்கினார். விஜயஅச்சம்பாடு கணேசபாண்டி உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திசையன்விளை தாசில்தார் ராஜேந்திரன், வடக்கு விஜயநாராயணம் வருவாய் ஆய்வாளர் ராணி, கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
ஆலோசனை கூட்டம்
இதையடுத்து மூலைக்கரைப்பட்டியில் உள்ள மணிமுத்தாறு பாசன உதவி பொறியாளர் அலுவலகத்தில் உதவி பொறியாளர் ரமேஷ்குமார் தலைமையில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி துணைத்தலைவர் நம்பி ரமேஷ் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மணிமுத்தாறு அணையில் இருந்து 3, 4-வது ரீச்களில் தண்ணீரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) மணிமுத்தாறு அணையின் பிரதான 3-வது, 4-வது ரீச்களை திறந்து பாசன குளங்களுக்கு தேதிவாரியாக தண்ணீர் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
3-வது ரீச் குளங்கள்
அதன்படி மணிமுத்தாறு 3-வது ரீச் மூலம் பாசன வசதி பெறும் குளங்களுக்கு கீழ்கண்ட தேதிவாரியாக தண்ணீர் வழங்கப்படுகிறது.
அதன்படி வருகிற 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பனைக்குளம் வசவப்பனேரி குளம், வீரகேரளப்பேரி குளம், லத்திகுளத்துக்கும், 18 முதல் 21-ந்தேதி வரை அம்பலம்குளம், டானார்குளம், குறுகால்பேரிகுளம், மீரான்குளத்துக்கும், 22 முதல் 25-ந்தேதி வரை கல்லத்திகுளம், அரசனார்குளம், பெருமாள்குளம், சேரகுளத்துக்கும், 26 முதல் 29-ந்தேதி வரை தான்தோன்றிகுளம், சின்னமூலைக்கரைகுளம், கூனிகுளம், முசலைகுளம், மீரான் மேலகுளம், இலுப்பைகுளத்துக்கும், 30-ந்தேதி முதல் பிப்ரவரி 2-ந்தேதி வரை பரணிபாடுகுளம், திருவருள்நேரி குளம், சின்னார்குளம், சிந்தாமணி கீழகுளத்துக்கும், பிப்ரவரி 3 முதல் 5-ந்தேதி வரை நாகல்குளம், சிந்தாமணி, மேலகுளத்துக்கும் தண்ணீரை வழங்க முடிவு செய்யப்பட்டது.
4-வது ரீச் குளங்கள்
மேலும் மணிமுத்தாறு 4-வது ரீச் குளங்களுக்கு கீழ்கண்ட தேதிவாரியாக தண்ணீர் வழங்கப்படுகிறது.
வருகிற 14, 15-ந் தேதிகளில் உன்னங்குளம், அரியகுளத்துக்கும், 16, 17-ந்தேதிகளில் ஆயர்குளம், தில்லாடன்குளத்துக்கும், 18, 19-ந்தேதிகளில் கன்னன்குளம், காடன்குளத்துக்கும், 20, 21-ந்தேதிகளில் கூந்தன்குளம், ராமகிருஷ்ணாபுரம் குளத்துக்கும், 22, 23-ந்தேதிகளில் கூந்தன்குளம், தினையூரணிகுளத்துக்கும், 24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை வடக்கு விஜயநாராயணம் பெரியகுளத்துக்கும், 29, 30-ந்தேதிகளில் ராமன்குளம், காரியாண்டி குளத்துக்கும், 31-ந்தேதி, பிப்ரவரி 1-ந்தேதி வரை தட்டான்குளம், வீரளசேரி குளத்துக்கும், பிப்ரவரி 2, 3-ந்தேதிகளில் நயினமுண்டான் கடையன்குளம், பட்டஞ்சேரி குளத்துக்கும், பிப்ரவரி 4, 5-ந்தேதிகளில் இரட்டைகிணறுகுளம், வேட்டாரங்குளத்துக்கும் தண்ணீர் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனை ஏற்று விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.