குன்னூரில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்


குன்னூரில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
x

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.30 விலை நிர்ணயம் செய்யக்கோரி குன்னூரில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

குன்னூர்,

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.30 விலை நிர்ணயம் செய்யக்கோரி குன்னூரில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேயிலை விவசாயிகள்

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. தனியார் தேயிலை தோட்டங்கள் மட்டுமின்றி, சிறு விவசாயிகளும் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தேயிலை விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை, தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகின்றனர்.

பச்சை தேயிலைக்கு தொழிற்சாலைகள் வார மற்றும் மாத விலைகளை விவசாயிகளுக்கு வழங்குகிறது. இந்த விலை வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் நடைபெறும் தேயிலை ஏலத்தில் விற்பனையாகும் தேயிலைத்தூளின் விற்பனை விலையை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஓராண்டாக பச்சை தேயிலை விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

உண்ணாவிரத போராட்டம்

இந்தநிலையில் நேற்று தேயிலை கிலோவுக்கு ரூ.30 நிர்ணயம் செய்யக்கோரி மலை மாவட்ட சிறு, குறு விவசாயிகள் சங்கம் சார்பில், உண்ணாவிரத போராட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே தேயிலை வாரிய அலுவலகம் செல்லும் சாலையில் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்க தலைவர் போஜன் தலைமை தாங்கினார். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர். போராட்டத்தில் கலந்துகொண்ட படுகர் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து, படுக பாடல்களை பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சங்க தலைவர் போஜன் கூறும்போது, பச்சை தேயிலைக்கு உரிய விலை வழங்கக்கோரி தேயிலை வாரியத்திடம் பலமுறை முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. கடந்த சில நாட்களாக தேயிலை கிலோ ரூ.7 முதல் ரூ.8 வரை விலை கிடைக்கிறது. உரம், மருந்து, தொழிலாளர்களுக்கு கூலி, பராமரிப்பு போன்றவற்றுக்கு கட்டுப்படி ஆகவில்லை. எனவே, மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார்.


Next Story