விளை நிலங்களுக்கு செல்ல பாலம் கட்டித்தரக்கோரி விவசாயிகள் மனு


விளை நிலங்களுக்கு செல்ல பாலம் கட்டித்தரக்கோரி விவசாயிகள் மனு
x

கரூரில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விளை நிலங்களுக்கு செல்ல பாலம் கட்டித்தரக்கோரி விவசாயிகள் மனு அளித்தனர்.

கரூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

தண்ணீர் தேங்கி நிற்கிறது

கூட்டத்தில், வெள்ளியணை அருகே உள்ள குமாரபாளையம் கிராம விவசாயிகள் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், எங்கள் குடியிருப்பு பகுதிக்கும், விவசாய நிலங்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் நீரோடை ஒன்று இருந்து வந்தது. அந்த நீரோடை வழியாக தான் விவசாய நிலங்களுக்கு சென்று வந்து கொண்டிருந்தோம். இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக நீரோடையில் தண்ணீர் ஓடாமல் இருந்து வந்தது. தற்போது நீரோடையில் 2 தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளது. சமீப காலத்தில் பெய்த மழையால் தடுப்பணையில் 4 அடிக்கு மேலாக தண்ணீர் தேங்கி உள்ளது.

இதனால் நீரோடையை கடந்து நாங்கள் விவசாய நிலங்களுக்கு செல்லவோ, கால்நடைகளை ஓட்டி செல்லவோ, மாட்டு வண்டி மற்றும் டிராக்டர் உள்ளிடவற்றை எடுத்து செல்ல முடியாமல் தவித்து வருகிறோம். மேலும் விவசாயம் செய்ய முடியவில்லை. எனவே நீரோடைக்கு குறுக்கே பாலம் அமைத்து தரவேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

நஷ்ட ஈடு வழங்க வேண்டும்

குளித்தலை அருகே உள்ள மேலசுக்காம்பட்டியை சேர்ந்த விவசாயி சீனிவாசன் நெல்பயிருடன் வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது வயலில் நெல் மையத்தில் இருந்து விதை நெல்களை வாங்கி பயிரிட்டேன். இதில் நான் கேட்ட ரகத்திற்கு பதிலாக வேறு 3 வகையான கலப்பட நெல் விதைகளை கொடுத்து விட்டனர். தற்போது நெற் பயிர்கள் சில அறுபடைக்கு தயாராகும் நிலையிலும், சில நெற் பயிர்கள் விளையும் தருவாயிலும் மாறி மாறி உள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஏற்கனவே மனு கொடுத்துள்ளேன். 15 நாட்களில் தீர்வு கிடைக்கும் என கூறியதை அடுத்து, ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை

வரவணை ஊராட்சிக்குட்பட்ட வேப்பங்குடி கிராமமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் பெரியாண்டவர், கருப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பல தலைமுறையாக எங்கள் ஊர் பகுதியை சேர்ந்தவரே பூசாரிகளாக இருந்து கோவிலுக்கு தேவையான பூஜைகள் உள்ளிட்டவற்றை செய்து வந்தனர். இந்தநிலையில் வெளியூரை சேர்ந்த சிலர் எங்கள் ஊர்மக்கள் செய்ய வேண்டிய முறையை தட்டிப்பறித்தும், நாங்கள் வழிபாடு செய்வதையும் தடுத்து வருகின்றனர். இதனால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என அதில் கூறியிருந்தனர்.

பணி நிரந்தரம் வேண்டும்

கரூர் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன் கொடுத்த மனுவில், கரூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், ஓட்டுனர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், கணினி இயக்குனர்கள் உள்பட பல்வேறு துறைகளில் நிரந்தரமற்று பணியாற்றும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், சட்டப்படியான ஊதியத்தை வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.


Related Tags :
Next Story